ஐபிஎல் போட்டிகளில் சுவாரஸ்யத்தை கூட்ட கொண்டு வரப்படும் பவர் பிளேயர் முறை!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக தேவையான தருணத்தில் மாற்று வீரரை களமிறக்கும் முக்கிய விதி முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் 20 ஓவர் போட்டிகள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மேலும் விறுவிறுப்பை கொண்டுவருவதற்காக போட்டியின் முக்கியமான நேரத்தில் மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதியானது கொண்டுவரப்பட உள்ளது. 

பவர் பிளேயர் என்றழைக்கப்படும் அணியில் இடம்பெறாத இந்த வீரரை ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றார்போல வேண்டிய நேரத்தில் களமிறக்கும் புதிய விதியானது ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி ஒரு அணி சேசிங் செய்யும் போது முக்கியமான கட்டத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அணியில் இடம்பெறாத ஒரு பேட்ஸ்மேனை களம் இறங்கலாம். அதேபோல பந்து வீசும்போது முக்கியமான கட்டத்தில் அணியில் இடம்பெறாத பந்து வீச்சாளர் களமிறங்கி வெற்றிவாய்ப்பை பெறலாம். இதுகுறித்து மும்பையில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் மீட்டிங்கில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.