காட்டிக் கொடுப்பது தான் தினகரன் வேலை! கொந்தளிக்கும் பொன்னார்!

ஏற்கெனவே ஓ.பி.எஸ். தன்னை சந்தித்தார் என்று காட்டிக்கொடுத்து, பெரும் பரபரப்பை உண்டாக்கினார் தினகரன்.


அரசியலில் பேச்சுவார்த்தை நடத்துவது சகஜம், அதனை காட்டிக்கொடுப்பது அநாகரிகம் என்று பன்னீர் சொல்லியிருந்தார்.

அதே விஷயத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் தினகரன். தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பலவீனமான வேட்பாளரை குமரியில் நிறுத்த வேண்டும் என்று கருப்பு முருகானந்தம் மூலம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்தார் என்று காட்டிக் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல் இதனை பொன்னார் மறுத்தாலும், அப்படியொரு பேச்சு நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த சமாசாரம்தான்.

அதேபோல் ராமநாதபுரத்திலும் வலிமையான வேட்பாளரை போடவேண்டாம் என்று பா.ஜ.க. சார்பில் வேண்டுகோள் வைத்ததாக கூறுகிறார். அதாவது பா.ஜ.க. தன்னுடைய வெற்றிக்காக தினகரனிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வந்ததாக சொல்லியிருக்கிறார்.

பா.ஜ.க.வை நான் மட்டும்தான் தொடர்ந்து எதிர்த்துவருகிறேன், நான் மட்டும்தான் மோடி ஜெயித்தாலும் அவர் பின்னே போக மாட்டேன் என்று பேசிவரும் தினகரன், எப்படி இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஏன், அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்பது குறித்து எதுவுமே சொல்லவில்லை.

ஒருபக்கம் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் அவர்களிடம் பேசியிருக்கிறார் என்றால், துரைமுருகன் சட்டென தே.மு.தி.க.வை அம்பலப்படுத்தியது போன்று அப்போதே செய்திருக்கலாமே... இத்தனை நாட்கள் கழித்து திடீரென இப்போது காட்டிக் கொடுக்கிறார் என்றால், ஏதோ உள்குத்து என்பதுதானே தெளிவாகிறது.

பா.ஜ.க.வின் பி டீம் தினகரன் என்று சொல்லப்படுவதும் உண்மைதானோ... அதனால்தான் பங்காளிகள் போன்று அடித்துக்கொள்கிறார்களோ..?