தன்னுடைய மகள் இறந்த 2 நாட்களுக்குள்ளேயே காவல்துறை அதிகாரி மீண்டும் பணியில் சேர்ந்த சம்பவமானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
13 வயது மகளை பறிகொடுத்த அடுத்த 2வது நாள் கொரோனா தடுப்பு டூட்டியில் சேர்ந்த பெண் போலீஸ்..! நெகிழ வைக்கும் சம்பவம்!
ஒரிசா மாநில தலைநகரான புவனேஷ்வரில் கௌரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 43. இவர் பெண் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் இவரை ஏமாற்றி சென்றுவிட்டார். இவருக்கு லோபமுத்ரா என்ற 13 வயது மகள் உள்ளார். அவர் கல்லீரல் புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
கௌரி வயதான பெற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு உடைய தம்பி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே சென்ற மாதம் இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் கௌரி தீவிரமாக செயல்பட்டு வந்தார். அப்போது திடீரென்று லோபமுத்ராவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனையிலிருந்து கூறியுள்ளனர்.
உடனடியாக தன்னுடைய சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே லோபமுத்ராவின் உயிர் பிரிந்தது. மகளின் உயிர் பிரியும் நேரத்தில் தன்னால் அவளுடன் இருக்க முடியவில்லையே என்று எண்ணி கௌரி கதறி அழுதார்.
2 நாட்களிலேயே மீண்டும் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த செய்தியானது அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "அடுத்தவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக கௌரி செயல்பட்டுள்ளார். தன்னுடைய 13 வயது மகள் இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் கௌரியின் கடமை உணர்ச்சியால் வியந்து பாராட்டி வருகின்றனர்.