கைது செய்யப்பட்ட இளைஞரை பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை செய்து காவல்துறையினர் கொலை செய்திருக்கும் சம்பவமானது தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்ஸ் காலால் வயிற்றில் ஏறி மிதித்த போலீஸ்! ரத்த வாந்தி! உயிர் போகும் சமயத்தில் தென்காசி இளைஞர் சொன்ன பகீர் தகவல்! இன்னொரு சாத்தான்குளம்!

தென்காசி மாவட்டத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் குமரேசன். குமரேசனின் வயது 25. குமரேசனுக்கு செந்தில் என்பவருடன் கடந்த சில வருடங்களாக இடப் பிரச்சனையில் இருந்து வந்துள்ளது. இருவருமே இது சம்பந்தமான புகாரை காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.
விசாரணைக்காக குமரேசன் கடந்த மாதம் 8-ஆம் தேதியன்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் அவரை இலேசாக அடித்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மீண்டும் 10-ஆம் தேதியன்று காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலை பற்றி வெளியே கூறினால் பொய் வழக்குப்போட்டு சிறையில் தள்ளுவோம் என்றும், தந்தையையும் நிச்சயமாக துன்புறுத்தும் என்றும் காவல்துறையினர் குமரேசனை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஜூன் பத்தாம் தேதி முதல் அவர் இரத்த வாந்தி எடுத்து அவதிப்பட்டு வந்துள்ளார். 12-ஆம் தேதியன்று அவர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை குறித்து கண்ணீர் மல்க குமரேசன் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய கல்லீரலும், சிறுநீரகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடனடியாக குமரேசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில் 16 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குமரேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குமரேசனின் மறைவுக்கு காவல்துறையினரே காரணமென்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.