ஏட்டு வீட்டு கல்யாணத்தில் கைவரிசை! விழுப்புரத்தில் சிக்கிய கல்யாண மண்டப கொள்ளையன்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

திருமண மண்டபங்களை குழந்தைகளின் நகைகளை திருடுவதை வழக்கமாக வைத்துக்கொண்ட கொள்ளையனின் கைது சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக சசிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்ப திருமண விழா வடபழனியில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இவருடைய குழந்தையின் கழுத்திலிருந்து 4 சவரன் தங்க நகை திருடப்பட்டது.

உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது சசிகுமாரும் அவருடைய மனைவியும் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கி சென்று கழுத்திலிருந்து நகையை எடுத்துள்ளதை கண்டறிந்தனர். 

இந்த சம்பவத்தைக் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு கையும் களவுமாக பிடிக்க புறப்பட்டனர். 

காவல்துறையினரின் வாட்ஸ்அப் குழுக்களில் கொள்ளையனின் புகைப்படத்தை பரப்பினர். அப்போது புதுச்சேரியில் இதேபோன்று கொள்ளையர் ஒருவர் கைவரிசை காட்டி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது.

அங்கு சென்று விசாரணை நடத்தியபோது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாபுரம் காலனியில் வசித்து வரும் புருஷோத்தமன் என்பவர் தான் கொள்ளையில் ஈடுபட்டார் என்பதே காவல்துறையினர் உறுதி செய்தனர். மேலும் அவர் தலைமறைவாக இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

அவனுடைய செல்போன் சிக்னலை உபயோகித்து நள்ளிரவில் அவனுடைய வீட்டிற்கு சென்று காவல்துறையினர் அவனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் வடபழனியில் மட்டும் 4 திருமண மண்டபங்களில் இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுப்பட்டதை காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். மேலும் அவரிடமிருந்து 17 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தலைமைக் காவலரின் மகளிடமிருந்து திருடப்பட்ட 4 சவரன் நகையையும் மீட்டெடுத்தனர்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.