13 வயது சிறுமிக்கு 27 வயது நபருடன் திருமணம்! கடைசி நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு திருப்பம்!

8-ஆம் வகுப்பு சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் காமராஜபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமிக்கு 27 வயதான அவருடைய உறவினருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்த தகவல்கள் மாவட்ட குழந்தை நலக்குழுவிற்கு கிடைத்தது.

உடனடியாக குழுவை சேர்ந்தவர்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவலை அனுப்பினர். திருமணம் நடப்பதை உறுதி செய்த மகளிர் காவல்துறையினர் இருவீட்டு பெரியவர்களையும் வன்மையாக கண்டித்தனர்.

இதற்கு மேலும் திருமணம் நடைபெற்றால் இருவீட்டின் பெரியவர்களும் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்தனர். வருகிற 5-ஆம் தேதியன்று இருவீட்டாரும் சிறுமியுடன் சேர்ந்து மாவட்ட சமூகநலத்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவமானது தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.