திருட்டு போலீஸ் எஸ்ஐ..! சிசிடிவியால் அம்பலமான பகீர் சம்பவம்! செங்கல்பட்டு பரபரப்பு!

லாரியிலிருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பேட்டரி, டீசல் முதலியவற்றை திருடிய சம்பவமானது திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் பாலாற்றில் மணல் திருடப்படுவதாக  அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு சென்று லாரி மற்றும் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். ஆட்டோவை திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் லாரியை கிரிவலப்பாதையில் மறைத்து வைத்துள்ளனர்.

மறுநாள் இரவு நேரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு புல்லட்டிலும், காரிலும் 2 பேர் வந்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்த பேட்டரி மற்றும் டீசலை திருடி காரில் ஏற்றும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்றும், போலீஸ் ஃபிரண்ட்ஸ் குரூப்பை சேர்ந்த முருகன் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இரவு நேரத்தில் அங்கு சென்று டார்ச் லைட் அடித்து அங்கு வேற யாராவது இருக்கிறார்களா என்பதை பார்த்துள்ளனர்.  

லாரியின் பேட்டரியை கழற்றி முருகன் காரில் வைக்கிறார். கார்த்திகேயன் காரில் இருந்த கேனை எடுத்து லாரியிலிருந்து டீசலை திருடுகிறார். பின்னர் சுற்றத்தை கவனித்து விட்டு இருவரும் காரில் ஏறி செல்கின்றனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்தி கார்த்திகேயனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த செய்தியானது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.