திமுக எம் எல் ஏ செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் திடீர் சோதனை!!

போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்துபோது செந்தில் பாலாஜி வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


கடந்த 2011-16 அதிமுக அரசில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அந்த கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டில் திமுகவில் இணைந்த அவர் தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, அவருடைய தாய் மற்றும் தம்பி ஆகியோரது வீடுகளில் சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் திடிரென தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டிலும் மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. கரூர் டிஎஸ்பி தலைமையில் அந்த பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு முக்கிய காரணமாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.