ரூட்டு தல விவகாரம்! ஸ்பாட்லயே இல்லாத அப்பாவி கையை உடைத்த போலீஸ்! வெளியான திடுக் ஆதாரம்!

சென்னையில் கடந்த வாரம் ரூட் தல விவகாரத்தில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கை உடைந்ததாக கூறப்பட்ட மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்பது தெரியவந்துள்ளது.


சென்னையில் கடந்த வாரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் மோதிக் கொண்டனர். அரும்பாக்கம் அருகே திடீரென மாணவர்களின் ரூட் தல யார் என்கிற பிரச்சனையால் இந்த மோதல் வெடித்தது.

அப்போது மாணவர்களில் ஒரு தரப்பினர் பட்டா கத்தியுடன் மற்றொரு தரப்பை தாக்கினர். இதில் படு காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் மாணவர்களின் இந்த பட்டா கத்தி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக போலீசார் மோதலில் ஈடுபட்டதாக கூறி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி மூன்று பேரின் கை உடைந்துவிட்டதாகவும் மாவு கட்டுடன் அவர்கள் போஸ் கொடுத்தனர். பட்டா கத்தியை கையில் ஏந்திய மாணவர்களுக்கு போலீஸ் சரியான தண்டனை கொடுத்ததாக ஒரு தரப்பினர் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக போலீஸ் கைது செய்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக கூறப்பட்ட மதன் எனும் மாணவன் மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிய போது சம்பவ இடத்திலேயே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அந்த மாணவன் பல முறை கூறியும் போலீசார் கேட்காமல் அவன் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் சம்பவம் நடைபெற்ற போது பெரியபாளையம் எனும் பகுதியில் மதன் இருந்ததற்கான சிசிடிவி ஆதாரத்தை நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் ஒப்படைத்தார். அதாவது மதன் அன்றைய தினம் சென்னையிலே இல்லையாம்.

 இதன் அடிப்படையில் மதனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. போலீசார் குற்றவாளிகள் கையை உடைக்க ஆதரவு பெருகி வந்த நிலையில் சம்பவ இடத்தில் இல்லாத ஒருவரின் கையை உடைத்த விஷயம் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு பின்னடைவாகியுள்ளது.