போலீஸ் எஸ்.ஐக்கு தம்பி மனைவியுடன் தகாத உறவு! தட்டிக் கேட்ட காதல் மனைவி மர்ம மரணம்!

சென்னை அருகே சேலையூரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


  தாம்பரத்தை அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் ஜெய் கணேஷ். இவர் தனது மனைவி பிரவீணாவுடன் மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜெய் கணேஷ் தனது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

  விரைந்து வந்த போலீசார் பிரவீணா உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள பிரவீணாவின் உறவினர்கள் சேலையூர் விரைந்தனர். பிரவீணா உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் திரண்ட அவர்கள் அழுது புலம்பினர். பிரவீணாவுக்கு தாய், தந்தை கிடையாது. பிரவீணாவை அவரது அத்தை கலா தான் வளர்த்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கலா, தனது மருமகள் பிரவீணாவை ஜெய் கணேஷ் காதலித்து திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.

 பிரவீணாவுக்கு 17 வயது இருக்கும் போதே ஜெய் கணேஷ் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கலா தெரிவித்துள்ளார். திருமணத்தின் போது மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த ஜெய்கணேசுக்கு பிறகு காவல் உதவி ஆய்வாளராக பணி கிடைத்தாக அவர் கூறியுள்ளார். இதன் பிறகு தான் ஜெய் கணேசின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கலா தெரிவித்துள்ளார். தாய் தந்தை இல்லாத நிலையில் 100 சவரன் நகை வேண்டும் என்று பிரவீணாவை ஜெய்கணேஷ் அடித்து தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

  மேலும் ஜெய் கணேசுக்கும் அவரது தம்பி மனைவிக்கும் தகாத உறவு இருப்பதை பிரவீணா கண்டுபிடித்ததாக கலா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்தே ஜெய் கணேஷ் பிரவீணாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரவீணா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கலா தெரிவித்துள்ளார். பிரவீணா மரணத்தில் மர்மம் இருபபதாகவும் கலா தெரிவித்துள்ளார்.

 எனவே சேலையூர் காவல் நிலைய எஸ்.ஐ ஜெய் கணேசை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே கலா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய் கணேசிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் தான் உதவி ஆய்வாளர் என்பதால் தன் மீது வழக்கு பதியமாட்டார்கள் என்றும், புகார் அளிக்க கூடாது என்று உறவினர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

 ஜெய் கணேஷ் பணி புரியும் காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனடியாக சஸ்பென்ட் செய்து விசாரணை நியாயமாக நடைபெற உதவ வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.