குபுகுபு நச்சுப்புகை! மயங்கி விழுந்த மக்கள்! மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்! மூடி மறைக்க முயற்சி?

மேட்டூரில் இயங்கிவரும் ரசாயன நிறுவனத்திலிருந்து ரசாயன புகை வெளியானதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


மேட்டூரில் கெம்பிளாஸ்ட் என்ற ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று புதிதாக ஹைட்ரஜன் பெராக்சைடு வாயு தயாரிக்கும் பிளான்ட் அமைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இந்த புதிதாக அமைக்கப்பட்ட பிளாண்ட்டிலிருந்து திடீரென்று நச்சுப்புகை வெளியாகியுள்ளது. திடீரென்று வெளியானதால் தொழிற்சாலையில் பணியாற்றிய மக்களால் தங்களைக் காப்பாற்றி கொள்ள இயலவில்லை. அந்த நச்சுப்புகையை சுவாசித்த 4 பேர்  மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 15 பேர் புற நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ரசாயன ஆலையின் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன் பட்ட பொதுமக்கள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர். தொழிற்சாலை தற்காலிகமாக இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.