நள்ளிரவில் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை! ஒளிந்திருந்த இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., பதற்றத்தில் ராமதாஸ்..!

ஒரு வழியாக அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. திடீரென இரவு நேரத்தில் பியூஷ் கோயல் வந்தது ஏனாம்..?


பிப்ரவரி 14ம் தேதி இரவு பியூஷ் கோயல் சென்னைக்கு வருவது பரம ரகசியமாகத்தான் வைக்கப்பட்டது. ஆளும் கட்சியில் முதல்வர், துணை முதல்வர், பா.ஜ.க.வில் பொன்னார் மற்றும் தமிழிசைக்கும் மட்டுமே தகவல் தெரியும். தனி விமானத்தில் சென்னைக்கு வந்த தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், நேரடியாக ஆழ்வார்ப்பேட்டையில் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டுக்குப் போனார்.

பியூஷ் கோயல் அந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னரே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அந்த வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசியபிறகே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி முடிவாகிவிட்டாலும், திடீரென பியூஷ் கோயல் தமிழகம் வருவதற்கு காரணம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் விவகாரம் குறித்துப் பேசி முடிவெடுக்கத்தான் சந்திப்பு நடந்ததாம்.

இந்திய அளவில் பா.ஜ.க. பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இந்திய ஜனநாயக் கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் மட்டும் பா.ஜ.க. பட்டியலில் இருக்கிறது. 

பாட்டாளி மக்கள் கட்சிக்கும், விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க. சீட் ஒதுக்கவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டதாம். ஆனால், இப்போது ராமதாஸ் அளவுக்கு மீறி ஆசைப்படுகிறார். அதனால் பா.ம.க.வுடன் பேச அ.தி.மு.க. விரும்பவில்லை. நீங்கள் பேசுங்கள் அல்லது பா.ம.க.வுடன் உறவு இல்லை என்று அறிவித்துவிடுவோம் என்று டெல்லி மேலிடத்துக்குத் தெரிவித்ததாம்.

திடீரென அ.தி.மு.க.வினர் எதையாவது ஏடாகூடமாக பேசிவிடக் கூடாது என்பதாலே பியூஷ் கோயல் பதறியடித்து ஓடிவந்தாராம்.  சீட் எண்ணிக்கையைவிட பணம் கேட்பதில் பா.ம.க. மிகவும் பிடிவாதமாக இருக்கிறதாம். தொகுதிக்கு செலவழிக்க வேண்டாம், எங்கள் கையில் பணமாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்பதில்தான் பிரச்னையாம்.

இது குறித்து பியூஷ் கோயலிடம் முதல்வரும், துணை முதல்வரும் பேசியிருக்கிறார்கள். ஏற்கெனவே பியூஷ் கோயல் பேசுவதற்கு முயற்சி செய்தும் அன்புமணி கண்டுகொள்ளவில்லை. அதனால் பா.ம.க இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியுமா என்றும் பேசப்பட்டிருக்கிறது. அதற்குள் பியூஷ் கோயல் வந்த விவகாரம் வெளியே கசிந்துவிட்டதால், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி  வரவழைக்கப்பட்டார்களாம்.

மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை விவகாரத்தை அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்திவிட்டு பதில் சொல்கிறேன். அதுவரை கூட்டணி குறித்துப் பேசவேண்டாம் என்று அறிவித்து இருக்கிறாராம் பியூஷ் கோயல். பத்திரிகையாளர்கள் போனபிறகு இரண்டு முதல்வர்களும் வெளியேறி இருக்கிறார்கள்.

 இந்தக் கூட்டத்தில் இரண்டு முதல்வர்களும் கலந்துகொண்ட விவகாரம் தெரிந்து ராமதாஸ் பதறிப்போய் இருக்கிறார். இங்கு பணம் நேரடியாக கையில் தரவில்லை என்றால் எந்தப் பக்கம் போகலாம் என்று சிந்திக்கிறாராம்.

நள்ளிரவில் தொடங்கியிருக்கும் பேச்சுவார்த்தை எப்போது விடியப்போகிறதோ..?