தமிழக மக்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்... மக்கள் நன்றிகள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டாக மாறுகிறதா..?

பொங்கல் பரிசு என்று ஆயிரம் ரூபாய் கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், எல்லோருக்கும் லக்கி பிரைஸ் கொடுப்பது போன்று 2,500 ரூபாய் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரே‌‌ஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா-எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சர் பெருமக்கள் இதனை தொடங்கிவைத்தார்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டநெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ‌ஷிப்டுகளாக பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.

அரிசி அட்டைதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கிய டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் காலை வேளையில் 100 பேருக்கும், மதிய வேளையில் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரே‌‌ஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

டோக்கனில் குறிப்பிட்ட நாள் அன்று வர முடியாதவர்கள் 13-ந் தேதி அன்று பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட்களை பெற முடியாதவர்கள் 19-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இப்படி பொங்கல் வருவதற்கு முன்னரே மக்களுக்கு எடப்பாடியார் பொங்கல் டிரீட் கொடுத்துள்ளதற்கு தமிழகமெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலை தொடரவேண்டும் என்றால், எடப்பாடிக்குத்தான் எங்கள் ஓட்டு என்பதுதான் மக்களின் நிலவரம்.