உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலே மக்கள் தோற்றுவிட்டனர்! சட்ட பஞ்சாயத்து இயக்கம்!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமலே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டனர். மக்கள்தான் தோற்றுவிட்டார்கள் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் பதிவு வெளியிட்டுள்ளது.


அரசியல் சூழல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் பல்வேறு சாக்குப் போக்குகளை சொல்லி 3ஆண்டுகாலம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் முடிந்தவரை காலம் கடத்தியது அதிமுக..!! 

இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சில முன்னேற்பாட்டு வேலைகளை மாநில தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் வேளையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுப்பது, தேர்தலை இன்னும் தள்ளிப் போகவே செய்யும். தேர்தலே நடத்தப்படாமல் போவதற்கும் காரணமாக அமையலாம். 

ஆக மொத்தம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதிமுக-திமுக இருவருக்கும் அவரவரின் பார்வையிலான அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதில் முழு உடன்பாடு இல்லை..!!

மாநில தேர்தல் ஆணையத்தின் ஆளுங்கட்சிக்கு சாதகமாக போக்கும் இது போன்ற வழக்குகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது..!! வார்டு வரையறை, இட ஒதுக்கீடு போன்ற பணிகளை வெளிப்படைத் தன்மையோடு முறைகேடுகளுக்கு இடமில்லாமல் செய்திருந்தால் பல குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

(இன்றளவும் இது குறித்தான முழு விபரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் நேரில் சென்று வலியுறுத்திய போதும் இது குறித்து முறையான பதில் கிடைக்கவில்லை)

என்ன இருந்தாலும், "மாநில சுயாட்சிக்காக" குரல் கொடுக்கும் இரு கட்சிகளும் "கிராம சுயாட்சியை" கிள்ளுக்கீரையாக நினைத்து புறந்தள்ளுவது ஜனநாயகப் படுகொலையின் உச்சம். இரு கட்சிகளும் தாங்கள் நினைத்ததைச் செய்து வென்று விட்டார்கள்..!! தோற்றது மக்கள்தான்.. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டாவது மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.