பிள்ளைங்கள LKG சேர்க்கணும்! அட்மிசனுக்காக பள்ளிக்கூட வாசலில் விடிய விடிய படுத்திருந்த பெற்றோர்! எங்கு தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்களது குழந்தைகளை எல்கேஜி சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய விடிய பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்திற்கு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சங்கர வித்யாலயா என்ற மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிப்பிற்கு மொத்தமாக 80 சீட்டுகள் உள்ளன. வருகின்ற கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கடிதம் இன்று காலை 9 மணிமுதல் பெறப்படும் என்று அந்த பள்ளி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைக் கேட்ட பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அந்த பள்ளியில் எல்கேஜி சேர்ப்பதற்கு ஆர்வமாக நேற்று மாலை முதலே பள்ளிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இரவு மற்றும் கொசுக்கடி கூட என்று பாராமல் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர்.

எல்கேஜி படிப்பிற்காக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் இரவு முழுதும் காத்திருந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.