கையில் தட்டு..! வயிற்றில் பசி..! ஒரு வேளை சோத்துக்காக 4 கிலோ மீட்டர் வரிசையில் நிற்கும் கொடுமை..! எங்கு தெரியுமா?

ஊரடங்கு காலத்தில் உணவு பெறுவதற்காக மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்க வேண்டிய அவலமானது தென்னாப்பிரிக்கா நாட்டில் அரங்கேறியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 31,36,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளும் நோய் பரவலை தடுப்பதற்காக கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்கா நாடுகளிலும் மெல்ல மெல்ல கொரோனா ஊடுருவ தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5,951 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 116 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மார்ச் 27-ஆம் தேதி முதல் உள்நாட்டில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் சில தனியார் அமைப்புகள் உணவளித்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் செஞ்சூரியன் நகரில் தவித்து வந்த மக்களுக்கு உணவளிப்பதாக அரசாங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக மக்கள் கூட்டம் அப்பகுதியில் அலைமோத தொடங்கியது. கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கூடிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க இயலாமல் அதிகாரிகள் சற்று சிரமம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பறக்கவிடப்பட்டிருந்த ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. உண்பதற்கு உணவு கிடைக்காமல் மக்கள் 4 கீலோ மீட்டர் தூரத்திற்கு கூடிய சம்பவமானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.