நீடிக்கும் ஊரடங்கு..! குடும்ப செலவை சமாளிக்க ரேசன் கார்டு ஒன்றுக்கு ரூ.7500..! பக்கா ஐடியா? ஆனால்?

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7,500 ரூபாய் வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.  இதனால் தினசரி கூலி தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு குடும்பத்திற்கு தலா 7,500 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வைரஸ் தடுப்பில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் நான் தலைவணங்குகிறேன். முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன் கிட்டத்தட்ட 12 கோடி பேர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.

அவர்களுடைய தினசரி வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் சற்று முன்னுக்கு வருவதற்கு உதவும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய சமயத்தில் பாரதிய ஜனதா பாகுபாடு அரசியலை கடைபிடித்து வருவதாகவும், இதனைத்தான் கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் கூறுகையில், "ஊரடங்கின் வெற்றி மற்றும் வைரஸ் பரவலை தடுப்பது பற்றி மத்திய அரசு விரைவு தீர்மானிக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இந்த வைரஸ் பரவாமல் தடுக்க இயலும்" என்றும் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.