சாஸ்தா வழிபட்ட விநாயகர்..! கிரக தோஷத்தை நீக்கும் இறைவன்!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எடுத்துக்காட்டி சாத்தனூர் என்னும் கிராமத்தில் பாசிக் குளம் விநாயகர் கோவில் அமைந்துள்ளது


இந்த விநாயகரை பார்க்கும்போது ஒரு கையில் சின்முத்திரையும் மற்றொரு கையில் பாதங்களை நோக்கியும், இரண்டுகால்களை யோகபட்டம் கட்டி இருப்பதையும் காண முடிகிறது. ஹரிஹரன் கூடலில் அவதரித்த சாத்தன் இந்த இடத்துக்கு வந்து விக்நங்கள் தீர விநாயகரை குறித்து கடுந்தவம் செய்தார். தான் மேற்கொண்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற்றிட சாஸ்தா இந்த விநாயகரை வேண்டி தவமிருந்தார்.

சாஸ்தாவைப் தவத்தினைப் போற்றிய விநாயகர் வன்னி மரமாக அவர் முன் தோன்றினார். வன்னி மரமாகத் தோன்றிய விநாயகர் சாஸ்தாவிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சாஸ்தா நான் மேற்கொள்ள இருக்கும் பணிகள் வெற்றி அடைய வேண்டும் என்று வரம் கேட்டார்.

மேலும் பூலோகத்தில் வாழும் மக்கள் அனைவரின் துயரினைப் போக்கி அவர்கள் மனம் தெளிந்த நீர் போல சலனமின்றி இருக்க வேண்டும். பிரச்சினை மேல் பிரச்சனை வந்தால் மனித மனதில் குளத்தில் பாசி படிவது போல் துன்பம் சூழ்ந்து விடுகிறது. அதனை போக்கிட அருள்புரிய வேண்டும் என்றும் வரம் கேட்டார்.

விநாயகரும் பக்தர்கள் நம் மனதில் மாசு படியாமல் காத்தருள்வதாக கூறினார். இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தை வலம் வந்து விளக்கேற்றி இங்கு அருள்புரியும் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் மனக் குறைகள் நீங்கும். மனதில் மீண்டும் பாசிபிடிக்காதபடி விநாயகர் காத்தருள்வதால் இவரை பாசிக்குளம் விநாயகர் என்று அழைத்தார்கள். இவரை வழிபட மனம் தெளிவடையும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்த விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும், சனி தோஷங்களை அகற்றுவார். இடர்களையும் இந்த விநாயகர் இன்னல்களை அகற்றுவார். பங்குனி உத்திரம் அன்று வழிபடுவது விசேஷம், நட்சத்திரங்களில் உத்திரம், கிழமைகளில் சனிக்கிழமைகளில் வழிபட சனிதோஷங்கள் அகலும்.