சுர்ஜித்துக்கு என்ன ஆச்சு? டிவியில் மூழ்கியிருந்த பெற்றோரின் 2வயது குழந்தை டிரம்மில் விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

சுர்ஜித்தின் நிலவரத்தை கண்காணித்து இருந்தபோது 2 வயது குழந்தை ட்ரம்மில் விழுந்து உயிரிழந்த சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 3 நாட்களாகவே சுர்ஜித்தின் நிலைமையை குறித்து தமிழகத்து மக்கள் அனைவரும் கவலை கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு லிங்கேஷ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் நிஷா. இத்தம்பதியினருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ரேவதி சஞ்சனா என்ற 2 வயது மகள் உள்ளார்.

நேற்று இரவு இவர்களும் சுர்ஜித்தின் நிலையை குறித்து தொலைக்காட்சியில் ஆழ்ந்து கவனித்து வந்திருந்தனர். அப்போது இவர்களுடைய மகள் கழிவறைக்கு சென்றிருக்கிறார். ட்ரம்மில் தண்ணீர் எடுக்க முயற்சித்த போது எதிர்பாராவிதமாக குழந்தை, ட்ரம்மிற்குள் விழுந்துள்ளது. 

பெற்றோர் இருவரும் சுர்ஜித் நிலைமை குறித்து ஆழ்ந்து கவனித்து கொண்டிருந்ததால், தங்கள் மகள் இல்லாததை அவர்கள் கவனிக்கவில்லை. சில மணிநேரத்திற்குப் பிறகு மகளுடைய நினைவு வந்தவுடன் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இறுதியாக அவர்களுடைய வீட்டின் கழிவறையில் தேடிய போது டர்ம்முக்குள் விழுந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கண்முன்னே தங்கள் குழந்தை இறந்ததை தாங்க இயலாத பெற்றோர் கதறி அழுதனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திரேஸ்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.