பெண்களின் அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும் பத்தினி அம்மன்! ஒரு முறை வணங்கினால் போதும்! எங்கு உள்ளது தெரியுமா?

பெண்களுக்கான பிரச்சனை எதுவாக இருந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம் உங்களுக்கு அருள் செய்வதற்காக உங்கள் கஷ்டங்களை தீர்ப்பதற்காக பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக வரம் தருவதற்காக காத்திருக்கிறாள், பாப்பா கோயில் பத்தினியம்மன்.


பெண்கள் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் கண்கண்ட தெய்வமாக நாகை மாவட்டம் பாப்பா கோயில் பகுதியில் அருளாட்சி புரிந்து வருகிறாள் பத்தினியம்மன். தாயின் மடியில் இருப்பதுபோல பத்திரமாக அரவணைத்து பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுவாள் பத்தினியம்மன் என்பதில் நம்பிக்கை. அது நடக்கவும் செய்வதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இங்கே நிறைகிறது.

இத்தனை சக்தி வாய்ந்த அம்மன் இருக்கும் கோயிலில் பிரம்மாண்டமான கோபுரம், பெரிய பெரிய சன்னதிகள், அம்மனுக்கு பெரிய சிலை என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படி இல்லை. சின்னச் சின்னதாய் ஏழு அம்மன்கள் வரிசையாய் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி என்று அத்தனை பேரையும் சேர்த்துத்தான் பத்தினியம்மன் என்று அழைக்கிறார்கள்.

காலங்காலமாக பத்தினியம்மன் சன்னதிக்கு கூரை கிடையாது. வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து இயற்கையோடு ஒன்றி இருக்கிறாள் தேவி. ஒரு திருவிழா சமயத்தில் பக்தர் ஒருவர் மேலே கூரை எழுப்ப, மறுநிமிடமே பற்றி எரிந்து விட்டது. கூரை கட்டிய பக்தரின் கனவில் அம்மன் வந்து ஏழை எளிய மக்களைப் போல நானும் மழையில் நனைவேன், வெயிலில் காய்வேன் என்று கூறியதாக பரவசத்துடன் சொல்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

பல காலத்திற்கு முன் இப்பகுதியில் கயவன் ஒருவன் இளம்பெண் ஒருத்தியை தவறான எண்ணத்தோடு துரத்திக் கொண்டு வந்தான். ஒளிய இடமில்லை, உதவிக்கு ஆளில்லை என்ற நிலையில் கற்பை காப்பாற்றிக் கொள்ள ஓடினாள் அந்தப் பெண். ஓடி ஓடி களைத்துப் போனவள், இந்த கோவில் இருக்கும் இடத்தில் உள்ள குளத்தங்கரைக்கு வந்து படித்துறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். காமம் கண்களை மறைக்க ஓடிவந்த கயவன் அவளைத் தேடி தேடி கடைசியாக அவளைப் பார்த்து விட்டான். குளத்தங்கரையில் ஒளிந்திருந்த அவளை அந்த குணக்கேடன் நெருங்கிய சமயத்தில்தான் அது நடந்தது. அம்மா என்றலறிய அவளது குரலின் எதிரொலி அடங்கும் முன் அங்கே கோயில் கொண்டிருந்த அம்மன் அருளால் தூள் தூளாகச் சிதறிப் போனான் அந்தக் கயவன். பத்தினியின் கற்பைக் காத்த அம்மன் அன்றுமுதல் பத்தினியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

இந்த பகுதியில் வண்டிகளில் செங்கல் ஏற்றிச் செல்பவர்கள் கோயிலைத் தாண்டும்போது இரண்டு கல்லை எடுத்து கீழே போட்டு விட்டு செல்கிறார்கள். அப்படி செய்வதால் செங்கல் நன்கு விற்பனையாகும் என்றும் அதனால் கட்டப்படும் வீடுகள் வலுவுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

இந்த அம்மனை வணங்கி தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்த பெண்கள் ஏராளம் என்று சொல்கிறார்கள் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது ஆடிப்பெருக்கன்று காவேரிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வணங்கி தாலி பிரித்துக் கோப்பது போன்ற விஷயங்களை நடத்திக் கொள்கிறார்கள்.