பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய தமிழ் கடவுள் முருகனின் சிறப்புக் குரிய விரத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
6.4.2020 பங்குனி உத்திரம் – நல்ல திருமண வாழ்க்கை அமைய கல்யாண விரதமாகிய இத்தினத்தில் விரதம் இருங்கள்!

மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வதாக இருக்கும் உத்திரம் வரும் நாள் 12 திருக்கைகள் கொண்ட வேலனுக்கு சிறப்புக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. தவ நிலையில் இருந்த சிவனின் மோன நிலையை கலைத்த மன்மதனை எரித்ததால் சோகத்தில் தேவர்கள் இருந்தனர். இதனால் தேவர்களுக்கு ஆறுதலாக சிவ பெருமான் தேவியை இந்த தினத்தில் மணந்ததார் என்பது ஐதீகம்.
அறுபடை வீடுகளில் இந்த பங்குனி உத்திர தினம் கோலாகலமாக கொண்டாடப் பட்டாலும், திண்டுக்கல் பழனியில் திருவிழாவும், தேரோட்டம் என வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, போகரால் உருவாக்கப்பட்ட நவபாசான பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பங்குனி வெயிலில் வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நீரால் குளிர்விக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த தினத்தில் தான் ராமன் சீதையையும், பரமேஸ்வரன் பார்வதியையும்,
முருகன் தெய்வானையையும் கரம் பிடித்தனர். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார். தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். இதனால் இந்த பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என அழைக்கப்படுகிறது.
இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.
இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.
அன்று காலை எழுந்து அத்யாவசிய பணிகள் முடிந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வாருங்கள் நஞ்சென வந்த துன்பங்கள் பஞ்சென பறந்திடும். நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்ளவேண்டும். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும்.
மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது நல்லது. இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜாதகத்தில் பல்வேறு தோஷங்கள் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுபவர்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் காரணமாக தொடர்ந்து கல்யாண தடங்கலை சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் எல்லா தடைகள், தடங்கல்கள், இடையூறுகளும் நீங்கி சுபயோக சுபவாழ்வு அமையும் என்பது ஐதீகம்.