கேப்டன் எங்களை மன்னிச்சிடுங்க! சர்ப்ராஸிடம் கதறிய பாக்., ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான சர்ப்ராஸ் அஹமதிடம் அந்நாட்டு ரசிகர்கள் மன்னிப்பு கேட்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த மாதம் 16-ஆம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அந்த தோல்வியை சகித்துக் கொள்ள இயலாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீரர்களை அளவுக்கு மீறி விமர்சித்து வந்தனர்.

குறிப்பாக அணியின் கேப்டனான சர்பராஸ் அஹமத் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். சமூக வலைத்தளங்களை உபயோகித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 

இதற்கு பாராட்டும் வகையிலும் கடந்த சில தினங்களாக அநாகரீகமாக நடந்து கொண்டதற்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

மேலும் அணியின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் எந்நிலையிலும் இதுபோன்ற இழிவான செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என்றும் சமூக வலைதளங்களில் அந்நாட்டு ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

போட்டியின் போது லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர் ஒருவர்  பெரிய வெள்ளை கொடியில் "எங்களை மன்னித்துவிடுங்கள் சர்ஃப்ராஸ்" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்தது.

இறுதியாக பாகிஸ்தான் ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்து விட்டனர் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.