பி.எஸ் ஐ லவ் யூ: இலக்கணம் மீறிய காதல் கவிதை
மரணத்திற்குள் பார்க்கவேண்டிய திரைப்படம்! பி.எஸ் ஐ லவ் யூ!!!
ஒரு நகைச்சுவை கேள்விப்பட்டிருப்பீர்கள். கணவன் சாகும் தருவாயில் இருக்கும்போது, ‘நான் எய்ட்ஸ் வந்த காரணத்தால் இறக்கப்போகிறேன். நீங்களாவது எச்சரிக்கையாக இருங்கள்’ என்று உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அறிவிக்கிறான். உடனே மனைவி அவனிடம், ‘உங்களுக்கு புற்றுநோய்தானே, ஏன் இப்படி சொல்கிறீர்கள்?’ என்று சந்தேகம் கேட்கிறாள். உடனே கணவன், ‘உன்னை பழிவாங்குவதற்கு எனக்கு வேறு வழியே தெரியவில்லை’ என்றபடி மண்டையைப் போட்டானாம். இப்படி இல்லாமல் தன்னுடைய மரணத்துக்குப் பிறகும் காதல் மனைவி கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்பதற்காக ஒருவன் எந்த அளவிற்கு போகிறான் என்பதை சொல்லும் வித்தியாசமான காதல் படமே பி.எஸ் .ஐ. லவ் யூ
20 வயசுப் பெண் ஹோலிக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்ரியைப் பார்த்தவுடன் முதல் பார்வையிலே காதல் வருகிறது. உடனே இருவரும் கல்யாணம் முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இது கல்யாணத்துக்கு ஏற்ற வயது அல்ல என்று குடும்பத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருவரும் திருமணம் முடித்துக்கொண்டு தனியே வாழத் தொடங்குகிறார்கள். பத்து வருடங்கள் கலகலப்பும், ஆர்ப்பாட்டமுமாக வாழ்க்கை நகர்கிறது. அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வரும், ஆனால் ஊடல் கூடலில் முடிந்துவிடும். அப்படித்தான் ஒரு குழந்தை வேண்டும் என்று ஹோலி ஆசைப்படுவதில் படம் தொடங்குகிறது. ஜெர்ரி ஆசையை தள்ளிப்போடச் சொல்கிறான். இருவரும் ஆக்ரோஷமாக சண்டை போடத்தொடங்கி, அதைவிட ஆக்ரோஷமாக காமத்தில் விழுகிறார்கள்.
எல்லாம் சுபமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், திடுமென மூளைப் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகிறான் ஜெர்ரி. 30 வயதில் விதவையாக நிற்கிறாள் ஹோலி. புயல் அடித்து ஓய்ந்துபோனது போல் திகிலில் நிற்கும் ஹோலிக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. சோகத்தில் கரைந்துதுடிக்கும் ஹோலிக்கு பிறந்தநாள் வருகிறது. அதை நினைத்துப் பார்க்கக்கூட மனமில்லாமல் அழுது துடிக்கும் ஹோலிக்கு, ஒரு கேக் பார்சல் வருகிறது. அதனை அனுப்பியது ஜெர்ரி என்று தெரியவர ஆச்சர்யத்துடன் வாங்குகிறாள். அந்த கேக்குடன் ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருக்கிறான் ஜெர்ரி. மரணத்துக்கு முன்னரே தனக்காக இப்படியொரு ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதை நினைத்து நெகிழ்கிறாள் ஹோலி.
அந்த சந்தோஷம் தீர்வதற்குள் அடுத்து ஒரு கடிதம் வருகிறது. அவளை குறிப்பிட்ட இடத்துக்குப் போகச்சொல்லி கடிதத்தில் எழுதியிருக்கிறான். அது அவள் நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய இடம். அதுபோல் வரிசையாக கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொரு கடிதமும் அவள் மனநிலையை உற்சாகத்துக்கு மாற்றுகிறது. அடுத்த கடிதம் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறாள். இந்த சூழலில் அவன் பிறந்த அயர்லாந்து நாட்டுக்குப் போகச்சொல்லி கடிதம் வருகிறது. அங்கே போகிறாள். அங்கே ஜெர்ரியைப் போலவே இருக்கும் அவனது உறவினரைப் பார்க்கிறாள். சின்ன வயதில் ஜெர்ரியின் எண்ணங்கள், ஆசைகளை எல்லாம் அறிந்துகொள்கிறாள்.
தன்னுடைய நினைவு துக்கத்தில் ஹோலி நகராமல் நின்றுவிடக் கூடாது என்பதற்காக அவளுக்கு வெவ்வேறு விஷயங்களில் ஆர்வத்தைத் தூண்டும்வண்ணம் கடிதங்கள் வருகின்றன. இன்னொரு வகையில் சொல்வது என்றால், இறந்தபிறகும் ஹோலிக்கு வழி காட்டுகிறான் ஜெர்ரி. அவளுக்கு ஷூ டிசைன் செய்வதில் ஆர்வம் இருக்கிறது. அதனைத் தூண்டும் வகையில் ஒரு செயல் நடக்கிறது. திடுமென ஷூ டிசைனில் இறங்கி விதவிதமாக டிசைன் செய்கிறாள். தன்னுடைய வாழ்க்கை மாறிவிட்டதுபோல் உணர்கிறாள். ஜெர்ரி நினைவுடன் தன்னால் வாழ்ந்துவிட முடியும் என்று எண்ணுகிறாள். ஒன்பது லெட்டர்கள் வந்துவிட்ட நிலையில் பத்தாவது லெட்டரும் வரும் என்று காத்திருக்கிறாள்.
இந்த நம்பிக்கையுடன் தன்னுடைய அம்மாவை சந்திக்கச் சொல்கிறாள். ஒரு காலத்தில் ஜெர்ரியைத் திருமணம் முடித்துக்கொள்ள கடுமையாக எதிர்ப்பு காட்டிய அம்மா பாட்ரிஷியா அவளை கட்டித்தழுவிக் கொள்கிறாள். ஜெர்ரியைப் பற்றி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்கிறாள். அவளிடம் இருந்து விடைபெறும்போது, பத்தாவது கடிதத்தை எடுத்துக் கொடுக்கிறாள் அம்மா.
இந்தக் கடிதங்களை எழுதியது எல்லாம் அம்மாவா, ஜெர்ரியா என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் காதலின் வலிமையை கொஞ்சமாவது உணர்ந்துகொள்ள முடியும். சாதாரண ஒரு வரிக்கதையை இத்தனை சுவாரஸ்யமாக்குவதற்கு திறமையான நடிகர்கள் தேவை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஹிலாரி ஸ்வாங், ஜெராடு பட்லருக்கான கெமிஸ்ட்ரி அபாரமானது. படம் பார்க்கும் ஒவ்வொரு நபரையும் காதல் வலைக்குள் இழுக்கும் படம் என்று இதனை உறுதியாகச் சொல்லலாம். திருமணத்திற்கு பிறகான காதலை சொல்லும் இந்த படம், நெஞ்சத்தை கிள்ளிவிடும்.
சினிமாவுக்கு என எந்த இலக்கணமும் இல்லாமல் எளிமையான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, நெஞ்சைத் தொடும் வசனங்கள் மூலம் அனைவரையும் இழுக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் திரைப்படம்.
IMDB மதிப்பெண் : 7.1/10
நமது மதிப்பெண் : 64
பின்குறிப்பு :
பி.எஸ். ஐ லவ் யூ என்ற பெயரில் சிசெலிய அஹெர்ன் எழுதிய நாவலைத் தழுவி, ரிச்சர்டு லா கிராவெனிஸ் இயக்கத்தில் 2007ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.
வழக்கமாக புத்தகம் படிக்கும்போது கிடைத்த சந்தோஷம் திரைப்படம் பார்க்கும்போது இல்லை என்றுதான் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள், புத்தகத்தைவிட படமே பெஸ்ட் என்று சொல்கிறார்கள்.
விமர்சகர்களால் இந்தப் படம் ஓஹோவென கொண்டாடப்படவில்லை என்றாலும், மிகச்சிறந்த காதல் படங்களில் ஒன்றாக ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள்.