அதிமுகவுடனான கூட்டணியை மக்கள் காரி துப்புகிறார்கள்! பாமக துணைத் தலைவர் நச் பேட்டி!

அதிமுக பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து அதை மக்கள் காரி உமிழ்கிறார்கள் என்று பாமக துணைத் தலைவர் மணிகண்டன் பேட்டி அளித்துள்ளார்.


கொங்குநாடு மக்கள் கட்சி என்கிற பெயரில் இயக்கம் நடத்தி வந்த பொங்கலூர் மணிகண்டன் சில வருடங்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து மணிகண்டனுக்கு பாமகவின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கலூர் மணிகண்டன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் மணிகண்டன் பேசியதாவது:- அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு மக்களை சந்திக்க முடியவில்லை. யாரைப் பார்த்தாலும் பாமகவில் இன்னுமா இருக்கிறீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். சொல்லப்போனால் இப்படி ஒரு கூட்டணியா என்று காரி உமிழ்கிறார்கள். ராமதாஸ் எதற்கு இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று அவருக்கே தெரியவில்லை.

ராமதாசை பொறுத்தவரை அன்புமணி மட்டும் ஜெயித்தால் போதும். பாமகவின் மற்ற வேட்பாளர்களை பற்றிய ராமதாசுக்கு கவலை இல்லை. அதிமுகவை மிகவும் கேவலமாக விமர்சித்து விட்டு தற்போது அவர்களுக்காகவே வாக்கு சேகரிக்க வெட்கமாக இல்லையா என்று என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.

பாமக நிர்வாகிகள் பலரும் கூட அதிமுகவுடனான கூட்டணியை விரும்ப வில்லை. இதனால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். இவ்வாறு பொங்கலூர் மணிகண்டன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.