ஊரடங்கு நீட்டிப்பா? மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மோடி..!

இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக தளர்த்தப்படாது என்று வெளியாகியுள்ள செய்திகள் வைரலாகி வருகின்றன‌.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 95,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 16,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 6,412 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 504 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 199 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. 834 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலின் பாதிப்பை குறைப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதியன்று நாடு முழுவதிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இன்னும் 4 நாட்களில் இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அதை நீடிப்பதா இல்லையா என்பது தற்போது விவாதம் ஆகியுள்ளது. இதுகுறித்து பலரின் கருத்துகளை கேட்டறிவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை காணொளி மூலமாக நடத்தினார். அப்போது அனைத்துக் கட்சி தலைவர்களும் ஊரடங்கும் நீட்டித்தாகவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரின் முன் வைத்துள்ளனர். 

அதன்பிறகு நாளை 2-வது முறையாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களும் வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலத்துறைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் நடு இருக்கைகள் கண்டிப்பாக அகற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் முற்றிலுமாக ஒரே நாளில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது. நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையை முடித்தபின்னர் பிரதமர் மோடி காணொலி மூலம் ஊரடங்கு குறித்து தகவல்களை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.