சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் செல்லாது..! AICTE அறிவிப்பால் அதிர்ந்த 7 மாணவர்கள்..!

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பகுதிநேர முதுகலை பட்டம் பெற்ற 7 பேர் பட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு அரசு வேலையும் பறிபோய் உள்ளது.


ஆந்திரப்பிரதேச மாநிலம் அனந்தபூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப கல்லூரியில் பணிபுரிந்து வரும் சுமார் ஏழு பேரின் முதுகலை பட்டப்படிப்பு செல்லாது என அவர்களது சான்றிதழ்களை பரிசோதித்துப் பார்த்ததில் தெரியவந்துள்ளது. இவர்கள் 7 பேரும் சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக முதுகலைப் பட்டப்படிப்பு படித்துள்ளதும் தெரியவந்திருக்கிறது. 

இதனால் வேலை பறிபோன இந்த ஏழு பேரும் தமிழகத்தில் தகவல் ஆணையரிடம் பல்கலைக்கழகம் குறித்து மனு அளித்தனர். இதனை விசாரிக்கையில், ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தரப்பில், பொதுவாக பகுதி நேரம் என்பது தினமும் மாலை நேரம் நடப்பது ஆகும்.

ஆனால் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வார இறுதி எனும் அடிப்படையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் AICTE ஒப்புதலை சத்யபாமா கல்லூரி பெற்றிருக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களுக்காக இவர்களது முதுகலை பட்டப்படிப்பு செல்லாது என கூறப்பட்டுள்ளது. 

சத்யபாமா தரப்பில் கூறுகையில், பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற பிறகு AICTE ஒப்புதல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பு வாதத்தையும் கேட்டுக் கொண்ட தகவல் ஆணையர் எஸ் முத்துராஜ் தீர்ப்பு அளிக்கையில், சத்யபாமா பல்கலைக்கழக விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கி அவற்றை ஆந்திர அரசுக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல் வேலை இழந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்குமாறு செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு இதற்கு முன்னரும் தற்போதும் பகுதி நேரமாக முதுகலை பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி சத்யபாமாவிற்கு இந்த உத்தரவு வழங்கப்படுகிறது. இதே தவறை தொடர்ந்து செய்தால் சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் தங்களது பட்டப்படிப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்து அறிய உரிமை இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.