கொரோனாவிற்கு தடுப்பூசி..! இன்னும் எத்தனை நாட்களில் தயாராகும்? ஆக்ஸ்போர்டு பேராசிரியர் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசி செப்டம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்ற செய்தியானது மக்களை சற்று மகிழ்ச்சி அடைய செய்துள்ளது‌.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,05,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 17,70,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 7,529  பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 653 பேர் குணமடைந்து இருப்பதாகவும்,  242 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நோய் தாக்குதலில் இருந்து உலக மக்களை காப்பதற்காக பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டிற்குவரும் என்பது குறித்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒரு குழுவாக அமர்ந்து இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவின் முக்கிய உறுப்பினரான சாரா கில்பர்ட் என்ற முதன்மை பேராசிரியர், "இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை செப்டம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிடுவோம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் அடிப்படையிலேயே இதையும் தயாரித்து வருவதால் 80% நிச்சயமாக இது பலனளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்த இரு வாரங்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குள் செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளோம். நாங்கள் செல்லும் பாதையில் இதே வேகத்தில் சரியாக சென்றாள் நிச்சயமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் கண்டுபிடித்துவிடலாம், இருப்பினும் இது என்னுடைய சொந்த கருத்தாகும்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது பிரிட்டன் நாட்டில் வைரலாகி வருகிறது.