ஜெ. சமாதியில் ஓபிஎஸ் தர்ம யுத்தம் செய்தது என்னால்தான்!! குருமூர்த்தி அதிர்ச்சி தகவல்!

திருச்சியில் நேற்றைய தினம் துக்ளக் பத்திரிகை சார்பில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்ற துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி சிறப்புரையாற்றினார்.


அவர் உரையாற்றிய போது பல அறிந்திராத தகவல்களை தமிழக மக்களுக்கு கூறியது குறிப்பிடத்தக்கது. அப்போது தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பற்றிய பல தகவல்களை குருமூர்த்தி கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் வகித்து வந்தார். அந்நேரத்தில் ஓபிஎஸ் ஐ அழைத்த சசிகலா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் தான் பதவி ஏற்க உள்ளதாக கூறியிருக்கிறார்.

ஆகையால் அந்த மண்டபம் சுத்தமாக இருக்கிறதா என்பதை மேற்பார்வையிடுமாறு ஓபிஎஸ் இடம் கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்த ஓபிஎஸ் , தன்னை வந்து பார்த்ததாக துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார். 

ஓபிஎஸ் இன் மனவேதனையை கேட்ட குருமூர்த்தி உடனடியாக நீங்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா அம்மையாரின் சமாதிக்கு சென்று தியானம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினாராம். அதன்படி ஓபிஎஸும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு சசிகலாவால் பதவி ஏற்க முடியாத சூழ்நிலை உண்டானது . ஆகையால் சசிகலா பதவி ஏற்காததற்கு காரணம் நான்தான் என்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் குருமூர்த்தி கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசிய துக்ளக் பத்திரிக்கையாசிரியர் குருமூர்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் தமிழக அரசியல் சிறப்பாக செயல்படும் என்றும் அவர் அரசியலுக்கு வருவது அவசியம் என்றும் கூறினார்.