ஓபிஎஸ் பயன்படுத்தும் ரூ.1 கோடி ரேஞ்ச் ரோவர் காரும்..! ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரது மூன்று வாரிசுகளும்! பரபரக்கும் தமிழக அரசியல்!

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஓபிஎஸ் மகன்கள் மற்றும் மகள் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி அவர் பயன்படுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல் தனது அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.


துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வீட்டு வசதித்துறை இலாகாவையும் கவனித்து வருகிறார். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் DTCP ஓபிஎஸ் கவனித்து வரும் வீட்டு வசதித்துறை இலாக்காவிற்கு கீழ் தான் வருகிறது. இதற்கிடையே ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் மகள் கவிதா பானு ஆகியோர் விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் சார்பில் திருப்பூரில் சுமார் 9 ஏக்கரில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியின்படி, திருப்பூரில் 9 ஏக்கரில் 117 குடியிருப்புகளை கட்ட ஜெயந்த் டெவலப்பர்ஸ்க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது மகன்கள் மற்றும் மகள் நடத்தும் நிறுவன பணிகளுக்கு அவரது தந்தை ஓபிஎஸ்சின் இலாகா அனுமதி கொடுத்துள்ளது.

இங்கு தான் தந்தை ஓபிஎஸ் தனது மகன்கள் மற்றும் மகள் நிறுவனத்திற்காக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சலுகை காட்டியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கடந்த ஆண்டு முதல் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புடைய Range Rover Sport 3.0L TDV6 diesel, SE 5-seater காரை பயன்படுத்தி வருகிறார்.

இந்த கார் ஓபிஎஸ் மகன்கள் நடத்தி வரும் ஜெயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அதாவது மகன்கள் நடத்தும் நிறுவனத்தின் காரை தந்தையான ஓபிஎஸ் தனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். மேலும் ஓபிஎஸ் இந்த காரை 2019 முதல் பயன்படுத்தி வரும் நிலையில் ஜெயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம் 2018ம் ஆண்டு தான் துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயந்த் நிறுவனத்தின் ரூ.1 கோடி மதிப்புடைய காரை ஓபிஎஸ் பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.