கணவனும் மனைவியும் மனம்விட்டு பேசினாலே மறைந்துவிடும் கஷ்டங்கள்..பிறந்துவிடும் சந்தோஷங்கள்..தெளிவான விளக்கங்களுடன்..

ஒருவர் டாக்டரிடம் போய், ‘என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. ஏதாவது மருந்து கொடுங்கள். அவர் டாக்டரிடம் வர மறுக்கிறார்’ என்று வேதனைப்பட்டார்.


உடனே டாக்டர், ‘அவரது காது கேட்கும் திறன் எப்படி இருக்கிறது என்பது தெரிந்தால்தான் மருந்து கொடுக்க முடியும். அதனால் எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் அவரால் கேட்க முடிகிறது என்பதை அறிந்து வாருங்கள்என்று அனுப்பினார்.

வீட்டு வாசலுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். உள்ளே இருந்து பதில் இல்லை.

அடுத்து ஹாலுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். அதற்கும் பதில் இல்லை. அடுத்து கிச்சனுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். அதற்கும் பதில் இல்லை. உடனே மனைவிக்கு எதிரே போய் நின்று, ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார்.

உடனே அவரது மனைவி, ‘வத்தக்குழம்புன்னு மூணு தடவை கத்தியும் காதுல விழலியா செவிட்டு முண்டமேஎன்று திட்டினாராம்.

இந்த நகைச்சுவையில் தெரிய வருவது என்னவென்றால், கணவரும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தாலும் விலகியே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களது குறைகளைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்.


கத்திக் கத்தி பேசுவதால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் மென்மையாகவும் அமைதியாகவும் பேசவேண்டும், அதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிறது ஓரு மருத்துவ ஆய்வு.

காதலில் விழுந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதை கவனித்து இருக்கிறீர்களா? அவர்களுக்கு அருகே உட்கார்ந்து இருப்பவர்களுக்குக்கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாது. அதே போல் பாசத்துடன் அம்மாவும் பெண்ணும் பேசிக்கொள்வதைக் கேட்டு இருக்கிறீர்களா? அவர்கள் மணிக்கணக்காய் பேசினாலும் அடுத்தவர்களுக்குக் காதில் விழாது. அத்தனை மெதுவாகப் பேசுவார்கள்.

காதலில் விழுந்தவர்கள் தெருக்களில் செல்போனில் பேசிக்கொண்டே நடப்பார்கள். வண்டிகளின் இரைச்சல், ஆட்களின் கரைச்சல் இருந்தாலும் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக்கொண்டே நடப்பார்கள். நமக்கு அவர்கள் பேசும் சத்தம் கேட்காது என்றாலும் எதிர் முனையில் இருப்பவர்கள் தெளிவாகவே புரிந்துகொள்வார்கள்.

ஏன் தெரியுமா?

அவர்கள் தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இதயங்கள் நெருக்கத்தில் உள்ளன. இதயம் அருகருகே இருப்பதால் மெல்லப் பேசினாலே இருவருக்கும் கேட்கிறது. அதனால்தான் அன்பு இருப்பவர்கள் மெல்லப் பேசுகிறார்கள்.

அவர்களே சண்டை போடும்போது சத்தம் போட்டு கத்துகிறார்கள். கோபத்தில் அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லோருக்குமே கேட்கும்படி இருக்கும். அப்போது அவர்களது இதயங்கள் விலகிப்போய் விட்டன. தூரத்தில் போய்விட்ட இதயத்துக்குத் தாங்கள் சொல்வது கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் உரக்கப் பேசுகிறார்கள். உரக்கப் பேசுவது இதயத்தை மேலும் மேலும் துன்புறுத்தக்கூடியது. அதனால்தான் சண்டை போடும்போது இருவரும் மூர்க்கமாகிறார்கள். சண்டை பிரிவாகிறது, பிரிவு வேதனையாகிறது.

அதனால் கருத்துவேறுபாடு ஏற்படும்போது அமைதியாகவும் அன்பாகவும் மென்மையாகப் பேசவேண்டும். அப்படிப் பேசுவதைத்தான் இதயம் புரிந்துகொள்கிறது. வேறுபாடுகள் மறைந்துபோகிறது. அதனால்தான் மனம்விட்டுப் பேசுங்கள் என்று கணவன், மனைவியருக்கு வலியுறுத்துகிறோம்.

எத்தனை பெரிய பிரச்னை என்றாலும் அதனை அன்பான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியுமே தவிர சண்டை போடுவதாலோ, உரக்கப் பேசுவதாலோ அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா... இனிமேல் மெல்லப் பேசுவோம். சந்தோஷமாக வாழ்வோம்