உலகிலேயே தவளை வடிவில் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான். ஏன் அப்படி கட்டினார்கள் தெரியுமா?

நாம் வாழும் இப்பூவுலகில் பிரமாண்டங்களுக்கும் விசித்திரங்களுக்கும் பஞ்சமே கிடையாது.


இந்த பூமண்டலம் முழுவதும் ஏராளமான விசித்திரமான இடங்களை நம்மால் பார்க்க முடியும். அவை, இயற்கையானது. நமக்காக உருவாக்கித் தந்தவை. அதேசமயம் மனிதர்களாலும் அவ்வப்போது சில வித்தியாசமான திருக்கோயில்களும் உருவாக்கப்படுகின்றன. நாம் விலங்குகள், பறவைகள், ஏன் பூச்சி, எறும்பு போன்றவைகூட ஈசனை பூஜிக்கும் தலங்களை தரிசித்திருப்போம். அதுபோல உத்திரப் பிரதேசம், லாஹிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள ஒயில் என்னும் ஊரில் மண்டூகத்தைப் தவளை பீடமாகக் கொண்ட சிவாலயம் ஒன்றுள்ளது. இருநூறு ஆண்டுகட்கு முற்பட்டது என்கிறார்கள்.

தவளை வடிவத்தை முன்புறமாகக் கொண்ட தாந்த்ரீக வடிவிலுள்ள ஒரே கோயில் இதுதான். அதாவது, உலகிலேயே ராட்சத சுதைச் சிலையான தவளை மீது கட்டப்பட்ட ஒரே கோயில். விலங்குகள், இந்தியத் தொன்மவியலிலும் புராணங்களிலும் பெரிதும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த நீர் நிலவாழ் உயிரினம், விதியை மாற்றக் கூடியது என நம்பினார் ராஜ்புத் மன்னர் பகத் சிங். இந்த நம்பிக்கையில் உருவானதுதான் ‘மண்டூக மந்திர்.’ இந்த ‘மண்டூக மந்திர்’ குறிப்பாக சிறுவர்களின் ஆரோக்யம் மற்றும் கல்வி மேன்மைக்கு துணை புரியும் என்று மக்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

‘மண்டூக மந்திர்’ கோயிலின் கர்ப்பக் கிரகமே மாண்டூக்கிய தந்திர யந்திரத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதாகவும், இது மண்டூக உருவின் பின் பகுதியில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம். தவளையின் பின்பக்க முதுகின் மீதுதான் ஒட்டுமொத்த கோயிலும் கட்டப்பட்டிருக்கின்றது. தவளையின் முதுகுதான் கோயிலையே தாங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கோயிலின் அமைப்பே மேலிருந்து பார்த்தால் ஒரு தாமரை விரிந்தாற்போலிருக்கும். அதிலிருந்து உச்சி நோக்கினால் கோபுரமே மொட்டு போன்று தெரியும்.

மண்டூக்கிய தாந்திரிக வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் வரிசை முறையில் அமையாது தவளைப் பாய்ச்சல் முறையில் விட்டு விட்டு அமையும் என்று கூறுகிறார்கள். இந்த முறையானது, ஒருவகை தாந்த்ரீக வழிபாட்டு முறையாகும். இந்த மண்டூக்ய மந்திரை அமைத்த ராஜ்புத் மன்னர் பகத் சிங் அவர்களின் நேர் ஏழாவது தலைமுறை வாரிசான பிரதியுமன் நாராயண் தாத்தா சிங் அவர்கள்,

‘‘இந்தக் கோயில் ஆனது கட்டட அமைப்பிலும் சிற்ப வேலைப்பாடுகளிலும் ஓவியங்களிலும் ஆகிய அனைத்திலும் மண்டூக்கிய தாந்திரிக முறையில் அமைந்துள்ளதால் ஆரோக்யம் மற்றும் கல்வியில் மேன்மை அடைய விரும்புவார்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்தையும் அடையலாம்.

இது உறுதி. எனது ஏழு தலைமுறைகளும் கண்ணால் கண்ட உண்மை’’ என்று கூறுகிறார். இதுமட்டுமல்லாது, தவளை கருவுறுதலின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தக் கோயிலுக்குச் சென்றால் குழந்தைப் பேறு, குழந்தைகளுக்கான நோய் போன்ற பிரச்னைகள் தீரும் என நம்பப்படுகிறது. சுமார் நூறு அடிகள்கொண்ட மாடம் மற்றும் அதிலுள்ள சிற்பங்கள், தாவர வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் தாந்த்ரீக முறையில் அமைந்துள்ளதைக் காணலாம். மிகமிக வித்தியாசமான முறையில் அவை காட்சியளிக்கின்றன. சிவலிங்கத்தின் மேலிருக்கும் நூறு அடிகள் உயரமான விதானம் சக்தியின் கூறாகவும் கருதப்படுகின்றது.

அதனாலேயே இந்த இடம் தாந்த்ரீக முறையில் ‘‘சிவ சக்தி’’ அருள் நிறைந்திருக்கும் அற்புத இடமாகவும் உள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவப்பரம் பொருளின் பெயர் நர்மதேஷ்வர் என்றும், பனசூர் பிராடி நர்மதேஸ்வர் என்றும் அழைக்கின்றனர். இந்த லிங்க மூர்த்தத்தை நர்மதா மலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த மண்டூக (தவளை) மந்திரைப்பற்றி உத்திரப் பிரதேசத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரசித்தி பெற்ற திருக்கோயில் இது. மற்றொரு சிறப்பான விஷயம் என்ன தெரியுமா? நாள் முழுவதும் திறந்திருக்கும் இந்த கோயில் மதிய நேரத்தில் மட்டுமே நடை சாத்தப்படுகின்றது. ஏனெனில், தவளை இரவில் விழித்திருக்கும் என்பதே இதன் காரணமுமாகும்.