சென்னை பெண் என்ஜினியர்களை குறி வைத்து அவர்களின் ஏ.டி.எம் கார்டுகள் மூலமாக ரூபாய் 10 லட்சம் வரை திருடிய ஜூஸ் கடை ஊழியர் கூட்டாளிகளோடு கைது செய்யப்பட்டுள்ளான்.
பெண் என்ஜினியர்களின் ஏடிஎம் கார்டு மட்டும் தான் குறி! ரூ.10 லட்சம் சுருட்டிய ஜூஸ் கடை ஊழியர்!
சென்னை பெருங்குடியில் உள்ள எஸ்பி இன்போ சிட்டி வளாகத்தில் இயங்கி வருகிறது ஜூஸ் இட் மற்றும் ஷாப் இ பஞ்சாப் கடைகள். இந்த கடைகளில் அங்கு உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் என்ஜினியர்கள் ஜூஸ் மற்றும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்போ சிட்டி வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண் என்ஜினியர்கள் வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை களவு போயுள்ளது.
தாங்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாத நிலையில் பயன்படுத்தி பணம் எடுத்திருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்ததை அறிந்த பெண் என்ஜினியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஒட்டு மொத்தமாக சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பெண் என்ஜினியர்களின் கணக்கில் இருந்து களவு போனதை போலீசார் கண்டறிந்தனர்.
பெண் என்ஜினியர்கள் அனைவருமே இன்போ சிட்டி வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில் எப்படி ஒரே வளாகத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் வங்கி கணக்கை கண்டுபிடித்து திருட முடியும் என போலீசார் விழிபிதுங்கினர். மேலும் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக அவர்களின் ஏ.டி.எம் கார்டுகளை எங்கெல்லாம் பயன்படுத்தியுள்ளனர் என போலீசார் ஆராய்ந்தனர்.
அப்போது பணத்தை பறிகொடுத்த அனைவருமே பல இடங்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியிருந்தால் அனைவரும் இன்போ சிட்டியில் உள்ள ஜூஸ் இட் ஷாப்பில் ஜூஸ் குடித்துவிட்டு ஏ.டிஎம் மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த ஜூஸ் கடைக்கு சென்ற போலீசார் அங்கு பணியாற்றி ஊழியர்கள் அத்தனை பேரையும் காவல் நிலையத்திற்கு அள்ளி வந்தனர்.
அப்போது தான் ராகுல் சிங் என்பவன் மூளையாக செயல்பட மற்ற எட்டு பேரும் அவனுக்கு உதவி பெண் என்ஜினியர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். அதாவது பெண் என்ஜினியர்கள் தாங்கள் சாப்பிட்ட ஜூசுக்கு பணம் செலுத்தும் போது அவர்களின் ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவி மூலம் ராகுல் சிங் குளோனிங் செய்துவிடுவதும், மேலும் அவர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை குறித்து வைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் ராகுல் சிங் தனது கையில் கட்டியுள்ள வாட்சில் கேமராவை இணைத்து வைத்துள்ளான். இதன் மூலம் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து பெண் என்ஜினியர்கள் ரகசிய குறியீட்டு எண்ணை செலுத்தும் போது அந்த கேமராவை கொண்டு ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்துள்ளான். ஏற்கனவே ஸ்கிம்மர் மூலமாக பெண் என்ஜினியர்களின் ஏடிஎம் அட்டையின் தகவல்களை சேகரித்து வைத்த ராகுல், வட மாநிலங்களில் தனக்கு உள்ள தொடர்புகள் மூலம் போலி ஏடிஎம் தயாரித்துள்ளான்.
அதனை வைத்து அவ்வப்போது பெண் என்ஜினியர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளான். சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்ட பணத்தில் பெரும்பாலாதை ராகுல் சிங் மற்றும் அவனது கூட்டாளிகள் செலவு செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் ஒன்பது பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெண் என்ஜினியர்கள் என்றால் பிரச்சனை வராது என்று நம்பி அவர்களை மட்டுமே குறி வைத்து திருடியதாக கூறியுள்ளனர்.
என்ன தான் வங்கிகள் ஏடிஎம், கிரடிட் கார்டுகளை பயன்படுத்த பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வந்தாலும் அதனை முறியடித்து பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் உருவாகிக் கொண்டே தான் இருக்கின்றனர்.