விஜயகாந்துக்கு ஒரே ஒரு சீட்டு…! கறார் அ.தி.மு.க., தினகரனிடம் சிக்குவாரா சுதீஷ்?

விஜயகாந்த்தை கூட்டிவந்தபிறகு கூட்டணி பேசலாம் என்று அ.தி.மு.க.வினர் நிபந்தனைக்காகவே வெளிநாட்டில் இருந்து வரவழைத்ததாக தே.மு.தி.க.வினர் குமுறுகின்றனர்.


சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வரப்போகிறார் என்றதும் தே.மு.தி.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகம் எழுந்தது. போதாக்குறைக்கு அவரது மகன் விஜயபிரபாகரன் வேறு, ‘விஜயகாந்த் வந்து இறங்கும்போது பூகம்பமே நிகழும், சென்னையே அதிரும்’ என்றெல்லாம் வீர வசனம் பேசி ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருந்தார்.

அதனால் விஜயகாந்த் வரும்போது சென்னை ஏர்போர்ட் அதிரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றதும் காத்திருந்து ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் விஜயகாந்தை கண்ணில் காட்டினார்கள்.

சனிக்கிழமை காலையில், விஜயகாந்த் ஏர்போர்ட்டில் இருந்து போனில் பேசிக்கொண்டு வருவது போன்று ஒரு போட்டோ போட்ட காரணத்தால், ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல் நிருபர்களும் விஜயகாந்த் பேசுவார் என்று பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால், நடந்ததே வேறு.

விஜயகாந்தை குண்டுக்கட்டாகத் துக்கி உட்காரவைத்து, அதேபோல் குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். வீட்டு வாசலில் ஆரத்தி எடுப்பார்கள் என்று நிருபர்களும் போட்டோகிராபர்களும் காத்திருக்க, யாருடைய கண்ணிலும் படாமல் வேனுடன் அப்படியே வீட்டுக்குள் போய்விட்டார்.

அடுத்தடுத்த நாட்கள் சில மாவட்டச் செயலாளர்கள் வீட்டுக்குப் போய்வந்தார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரிடமும் விஜயகாந்த் இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறார், ஓய்வு எடுக்கிறார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. யாராலும் அவரை பார்க்கவும், பேசவும் முடியவில்லை. அதனால் நொந்துபோய் திரும்பியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வினர் கூட்டணிப் பேச்சுக்கு முன்பு கேப்டன் வரவேண்டும் என்று சொன்னதற்காக இப்படி கூட்டி வந்திருக்கிறார்கள். அவர் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்ப எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் என்று மாவட்டச் செயலாளர்கள் வருத்தத்துடன் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தகவல் அப்படியே முதல்வர் எடப்பாடி வட்டாரத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. விஜயகாந்த் பிரசார மேடையில் ஏறுவார் என்ற நம்பிக்கையில்தான் அவரை கூட்டணிக்கு அழைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக அவர்கள்  சீட்டு கேட்டாலும் 2 சீட் கொடுக்க முடிவு செய்திருந்தார்கள். பிரேமலதாவுக்கு மட்டும் ராஜ்யசபா சீட்டுக்கு உறுதி அளித்திருந்தார்கள். ஆனால், சுதீஷ் தரப்பில் நான்கு சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால், நிலைமை இப்போது தலைகீழாகிவிட்டது. விஜயகாந்தால் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்துக்கு வரமுடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதனால் ஒரே ஒரு தொகுதி மட்டும் தருகிறோம் என்று அ.தி.மு.க.வினர் சொல்ல, சுதீஷ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தி.மு.க.வில் சபரீசன் பேசுவதற்கு தயாராக இருந்தாலும், அவரும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் போக மாட்டார்

அதனால் வேறு வழியே இல்லாமல் தினகரன் பக்கம் போய்விடலாமா என்று யோசித்து வருகிறார்கள். தினகரனுக்கு என்று கொஞ்சம் வாக்கு வங்கி இருக்கிறது. அதை வைத்து ஒரளவு வோட்டு விகிதம் வாங்கிவிட்டால், சட்டசபைத் தேர்தலுக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம்.

பிள்ளையார் பிடிக்க நினைத்து, என்னவோ ஆன விஷயமாகத்தான் இருக்கிறது தே.மு.தி.க. நிலைமை.