இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாத்தனும்! கங்குலி ஆவேசம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் மூத்த வீரர்கள் இடையே பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.


சில வருடங்களாகவே நாட்டிற்காக பெரும் பணியாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ நிறுவனம் சரிவர நடத்த வில்லை என்று கூறப்பட்டு வந்தது.  வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் எந்தவித பிரிவு உபசார விழாவுமின்றி கிரிக்கெட்டை விட்டு வெளியேறினர்.

சமீப காலங்களில் பிசிசிஐ நடவடிக்கைகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ நிறுவனமானது முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு சம்மன் அனுப்பியுள்ளது மூத்த வீரர்கள் இடையே அதிருப்தியை அதிகரித்துள்ளது. 

பிசிசிஐயின் கொள்கை பரப்பு செயலாளரான மாண்புமிகு முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் அவர்கள் கருத்து வேற்றுமையின் காரணமாக ராகுல் டிராவிடுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ராகுல் டிராவிட் தற்போதைய தேசிய கிரிக்கெட் மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை காரணம் காட்டி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினரான சஞ்சய் குப்தா ராகுல் டிராவிட் ஈடுபட்டு வரும் கருத்து வேற்றுமையினை விசாரிக்குமாறு முன்னாள் நீதிபதி அவர்களுக்கு பெட்டிஷன் அனுப்பியிருந்தார்.இதனை ஏற்ற நீதிபதி ராகுல் டிராவிடுக்கு பதிலளிப்பதற்காக 2 வாரம் கெடு கொடுத்துள்ளார். 

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய கொள்கை. கருத்து வேற்றுமை. செய்தியில் ட்ரெண்டிங் ஆவதற்கு நல்ல யோசனை. கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்" என்று பதிவு செய்திருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கங்குலியின் கருத்தை ஆமோதித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்," இந்திய கிரிக்கெட் எங்கு செல்கிறது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரை விட்டால் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்வதற்கு வேறு யாராலும் முடியாது.

சம்மன் அனுப்புவது இது போன்ற நட்சத்திர வீரர்களை அவமதிப்பதற்கு இணையாகும். உண்மைதான். கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும்" என்று பதிவு செய்திருந்தார். இந்த சம்பவமானது இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.