ஆதார் கார்டை அடகு வைத்து வெங்காயம் வாங்கும் அவலம்! எங்கு தெரியுமா?

வெங்காயத்தின் விலை மிக அதிரடியாக உயர்ந்து வருவதால் ஆதார் கார்டை அடகு வைத்து வெங்காயம் வாங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.


இந்தியாவில் சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில பகுதிகளில் அரசு வெங்காயத்தை குறைவான விலைக்கு விற்க முன் வந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் நடத்தும் கடையில் மக்களிடமிருந்து ஆதார் அட்டையை பெற்றுக் கொண்டு வெங்காயத்தை கொடுக்கின்றனர். பின்னர் வெங்காயத்திற்கு உண்டான கடனை அடைத்துவிட்டு ஆதார் கார்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் அங்கு வெங்காயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியினரிடம் கேட்டபோது நாங்கள் கடுமையான வெங்காய விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். வெங்காய விலை உயர்வுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவே ஆதார் அட்டையை பெற்றுக் கொண்டு வெங்காயத்தை கொடுத்து வருகிறோம் என்றும் அவர்கள் கூறினர்.