இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற இராமர் கோயில்களில் இதுவும் ஒன்று - ராமரும், இலக்குவனனும் வேறு உருவில் வந்து பக்தனை சிறையிலிருந்து விடுவித்த தலம்

பத்திராசலம் கோவிலைக் கட்டியவர் கஞ்சர்ல கோபண்ணா என்ற பக்த இராமதாஸ் ஆவார்.


இவர் பதினேழாம் நூற்றாண்டு (1630 கி.பி) கம்மமேட் வட்டம் நிலகொண்டபள்ளி என்னும் கிராமத்தில் லிங்கன்ன மூர்த்தி மற்றும் காமாம்பா ஆகிய பெற்றோர்களுக்கு மகனாக அவதரித்தார். வட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த இவர் தன அலுவலகப் பணிகளைச் செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தார். நவாப்புக்காக செவ்வனே நிலவரிகளை வசூலித்ததோடு இராம நாமத்தை ஓதியும் தன வீட்டில் ஏழைகளுக்கு உணவளித்தும் மகிழ்ந்தார் ஒரு சமயம் பல்வோஞ்ச பரகானா (palvoncha paragana). என்ற கிராமத்து மக்கள் பத்திராசலத்தில் சிலைகளைக் காணச் சென்ற செய்தியினைக் கேள்விப்பட்டு தானும் ஆவல் மிகுதியுடன் அங்கு சென்றார். அங்கே கண்ட சிலைகளின் அழகில் மயங்கினார். அப்போதே கிராம மக்களிடம் கோவில் கட்டும் திருப்பணிக்காக நிதியுதவி வேண்டினார். கிராம மக்கள் அவரிடம் நிலவரியாக வசூலித்த பணத்தை கோவில் கட்டும் பணிக்காகச் செலவு செய்யுமாறும், அறுவடை முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை திரும்பக் கொடுத்து ஈடு செய்து விடுவதாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து கோல்கொண்டா நவாப்பிடம் தேவையான அனுமதி பெறாமல் நிலவரி மூலம் வசூலான ரூபாய் ஆறு லட்சம் பணத்தைச் செலவு செய்து கோவில் திருப்பணிகளை நிறைவு செய்தார்.

கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில், சுதர்சன சக்கரம் ஒன்றை மூலவர் விமானத்தின் மேல் நிறுவும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும் அவதியுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார். இராமர் அவர் கனவில் தோன்றி அவரை கோதாவரி நதியில் முழுக்குப் போடுமாறும் அங்கே அவருக்கு வேண்டிய விடை கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். மறுநாள் இராமதாசர் நதியில் முங்கிய போது ஒரு சுதர்சன சக்கரத்தை அங்கு கண்டெடுத்தார். இந்த சக்கரம் இந்த நதியில் அவருடைய அன்பிற்குரிய கடவுள் இராமரால் அருளப்பட்டது என்று நம்பினார்.

திருப்பணிகள் முடிந்த தருவாயில் அவருக்குப் பல இன்னல்கள் காத்திருந்தன. நிலவரிப் பணத்தைத் தவறான வழியில் கோவில் கட்டப் பயன்படுத்திய குற்றத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கோல்கொண்டா சிறையில் சொல்லவொண்ணாத் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்களைத் தாங்க இயலாத நிலையில், இராமதாசர் இராமபிரானிடம் தம்மைக் காத்தருளும்படி பாடிப் பணிந்தார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள் தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.

குதூப் சாகி அரச வம்சத்தைச் சேர்ந்த கோல்கொண்டா அரசர் தானிஷா, இராமதாசர் சிறை பிடிக்கப்பட்ட பின்பு இராமர் பால் காட்டிய இறை நம்பிக்கையும் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்தார். தானும் ஒரு இராம பக்தனாக மாறினார். மேலும் ஒரு படி முன்னேறி கோவில் நிர்வாகச் செலவுகளைத் தன அரசே ஏற்கும்படி அமைத்தார்.

இது மட்டுமல்லாமல் இராமனும் இலக்குவனும் ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து இராமதாசர் செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை திரும்பச் செலுத்தி தமது பக்தனைச் சிறையிலிருந்து விடுவித்த நிகழ்வு கண்டு கோல்கொண்டா அரசர் நெகிழ்ந்து போனார். பின்னிரவில் வந்து தம்மை அணுகிய இந்த இரண்டு நபர்களிடம் அரசர் தாம் பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வழங்கினார். இதன் பின்னர் இந்த இருவரும் அரசரிடம் பெற்ற இரசீதினை சிறையில் இருந்த இராமதாசரின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் கண்விழித்த அரசர் இரவு தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இவர்கள் இராமனும் இலக்குவனுமே என்று உணர்ந்தார். உடனே இராமதாசரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். இராமதாசரைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் இராமதாசரோ தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் இறைவனின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் காணலாம்.

இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் ரூபாய் 20000/- அளவிலான வருமானமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இந்த ஆணை குதூப் சாகி அரச வம்சம் ஆண்ட காலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை (pearls) யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

பத்திராசலம் உலகிலுள்ள பலநூறு ஆயிரம் பக்தர்களைத் தன வசம் கவர்ந்திழுக்கிறது. புண்ணிய நதியான கோதாவரி பத்திராசலம் என்னும் இம்மலையைச் சுற்றியவாறு தெற்கு நோக்கிப் பாய்கிறது. இம்மலை மேரு மற்றும் மேனகாவின் மகனான பத்திரன் பெயரால் பத்திரகிரி என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் வரலாரோ இராமாயணத்துடன் இணைந்துள்ளது. இராமயணத்தில் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட மலை சூழ்ந்த பகுதியில் இராமன், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் அவர்கள் வனவாசத்தை இங்கே நிகழ்த்தியதாகத் தெரிகிறது. இந்தக் கோவிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணச் செய்தியில் திருமால் பக்த பத்திரன் என்னும் மலைநாட்டு (அரச) முனிவனின் கடும் தவத்தை மெச்சி அவருக்கு அருளும் நோக்கத்தில் இராமாவதாரம் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இராமர் தன் துணைவி சீதையுடனும், லக்ஷ்மணனும் சிலையாக அமர்ந்த இடம் பத்திரனின் தலை பகுதி என்பதால் இந்த மலைக்கு பத்திராசலம் என்ற பெயர் வந்தது. இந்த கோவிலில் இராமர் தனது 4 கரங்களுடன், சீதையை தனது இடது மடியிலும், லக்ஷ்மணனை வலது மடியிலும் அமர வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார்.