சிவபெருமானை பஞ்ச பூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் தலங்கள்! நெருப்பைக் குறிக்கும் கோயில் இதுதான்..!

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.


இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். 

புராணங்களின் படி ஒரு சமயம் சிவ பெருமானின் தோற்றம் மற்றும் முடிவு என்ன என்பதை பற்றிய விவாதம் “சிவன், பிரம்மா, விஷ்ணு” ஆகிய மூவரிடையே எழுந்த போது சிவபெருமான் இந்த அருணாச்சல மலையில் மிகப்பெரும் அக்னி பிழம்பு உருவத்தை பெற்று நின்றார். அப்போது சிவனின் அடிப்பகுதியை காண விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டு சென்றார். பிரம்ம தேவன் ஒரு அன்ன பறவையின் உருவம் கொண்டு சிவபெருமானின் உச்சிப்பகுதியை காண விண்ணை நோக்கி பறந்தாலும், சிவபெருமானின் தொடக்கம் எது என்று அறிய முடியாமல், சோர்ந்து தான் சிவனின் உச்சிப்பகுதியை கண்டதாக பொய்யை கூறினார். இந்த பொய்யை அறிந்த சிவபெருமான் பிரம்ம தேவனுக்கு இந்த பூவுலகில் எங்குமே கோவில் அமையாதவாறு சபித்து விட்டார். இந்த சம்பவத்திலிருந்து இத்தல சிவபெருமானை “அடி முடி காண முடியாத அண்ணாமலையார்” என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது. அக்னி ரூபமாய் எழுந்து பிறகு சாந்தமடைந்து உரைந்த சிவனின் வடிவத்தையே திரு அண்ணாமலையார் என்றும், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைத்து வணங்குகின்றோம். எனவே இந்தத் திருத்தலத்தில் இந்த மலைதான் இறைவனாகும்.  

சிவனை அக்னி வடிவிலும், விஷ்ணு அவருடைய காலடியில் வராக அவதாரத்திலும், பிரம்மனை அன்னம் வடிவத்திலும் மேலிருந்து விழும் தாழம்பூவுடன் வடிக்கப்பட்ட சிலை உருவையே லிங்கோத்பவர் என்று அழைக்கின்றோம். சிவனின் எந்தக் கோயிலிற்குச் சென்றாலும் லிங்கம் வீற்றிருக்கும் அந்தக் கருவறைச் சுவற்றின் பின்புறத்தில் லிங்கோத்பவர் சிலை பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த வடிவம் தோன்றிய இடம் இந்த புனிதத் திருத்தலமே. 

தனது கீழான வாழ்க்கையை எண்ணி அவமானமடைந்த “அருணகிரிநாதர்” தற்கொலை செய்து கொள்ள இந்த புனிதமான திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்திலிருந்து கீழே குதித்த போது முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்டு அவரின் அருளால் தீராத நோயிலிருந்தது குணமடைந்து, ஞான நிலையை அடைந்தார். முருகனின் புகழை பாடும் “திருப்புகழ்” எனும் பாடல் தொகுப்பையும் இயற்றினார். 

நாயன்மார்களால் பாடல் தலம் இது. இந்த திருவண்ணாமலை கோவிலுக்கு பின்பு இருக்கும் மலை சிவனின் அம்சமாக கருதி வழிபட படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்திருவிழா இக்கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த திருவண்ணாமலை அருணாச்சல மலையுச்சியில், ஒரு மிகப்பெரிய இரும்பு கோப்பையில்,3 டன் நெய்யை ஊற்றி பல கிலோ எடைகொண்ட துணிகளால் திரி போட்டு ஏற்ற படும் தீபம், நெடுந்தொலைவில் இருப்பவர்களும் தரிசிக்க கூடிய வகையில் இருக்கும். இத்தீபம் அக்கோப்பையில் உள்ள நெய் தீரும் வரை இரவு, பகல் பாராமல் எரிந்து கொண்டே இருக்கும். 

இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும். சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.  

இந்த திருவண்ணாமலை கோவிலை கிரிவலம் வரும் வழியில் “இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நைருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்” என “அஷ்டதிக் பாலகர்கள்” எனப்படும் எட்டு திசைகளின் அதிபதிகள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் உள்ள கோவில்கள் இருக்கின்றன. இந்த அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவதால் நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை. 

“சித்ரா பௌர்ணமி” தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பது திண்ணம் என கூறுகிறார்கள். இத்திருமலையை காலணி ஏதுமின்றி கிரிவலம் வருவோர் எல்லா பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, பந்த, பாசம், பற்று எனும் தடைகளில் இருந்து விடுபட்டு முக்தி பெறுவர் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என்று வயது பேதமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து கிரிவலம் செய்கின்றனர்.