சந்திரனை வணங்கினால் கலைஞன் ஆகலாம்! சந்திரபகவான் மகிமை அறிவோம்!

அத்ரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மும்மூர்த்திகளின் அனுகிரகத்தால் சோமன், துர்வாசர், தத்தாத்ரேயர் என்று மூன்று மகன்கள் பிறந்தனர்.


இவர்களில் துர்வாசர் வேதங்கள் பலவற்றை கற்று இறைவனிடத்தில் அன்பு கொண்டு மகரிஷி ஆகிவிட்டார். தத்தாத்ரேயர் தேவ கணங்களில் இணைந்துவிட்டார். சோமன் நவகிரகங்களில் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார்.

அனுசுயா தேவியின் பத்தினித் தன்மையை சோதிக்க மும்மூர்த்திகளாகிய சிவன் பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோர் விரும்பினர். அதன்படி மூவரும் முனிவர்கள் ஆக உருவெடுத்து அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து யாசகம் கேட்டனர். அவர்களை அனுசுயா தேவி வரவேற்று உபசரித்து உணவு அருந்தக் கூறினார்.

அப்போது முனிவர்கள் மூவரும் நாங்கள் இங்கு உணவருந்த ஒரு நிபந்தனை இருக்கிறது. அதனை ஏற்றால் தங்களின் விருந்தை ஏற்றுக் கொள்வோம் என்றனர். அதாவது விருந்து பரிமாறும் போது அனுசுயாதேவி பிறந்த மேனியோடு பரிமாற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிவெடுத்த அனுசுயா விருந்து பரிமாறும் நேரத்தில் தனது பத்தினித் தன்மையால் மும்மூர்த்திகளையும் பச்சிளம் குழந்தையாக மாற்றினாள். அதன்பின் மும்மூர்த்திகளும் அவர்களது ஆசிரமத்திலேயே பாலகர்களாக வளர்ந்தனர்.

நாட்கள் பல கடந்தது. மும்மூர்த்திகள் திரும்பாததால் கவலையுற்ற முப்பெரும் தேவியர் நடந்த விஷயத்தை நாரத மகரிஷி மூலம் அறிந்து அத்ரி மகரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றனர். தாங்கள் யார் என்பதையும் பாலகர்கள் யார் என்பதையும் கூறி தங்களது கணவன்மார்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி தர வேண்டும் எனக் கேட்டனர்.

தங்களிடம் யாசகம் கேட்டு வந்தவர்கள் மும்மூர்த்திகள் என்று அறிந்து திகைத்த அனுசுயா தேவி தனது தவவலிமையால் மீண்டும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினாள். அப்போதும் முப்பெரும் தேவியர் மற்றும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்ததில் மெய்மறந்து நின்றனர்.

அனுசுயாதேவியின் பத்தினித் தன்மையை உலகறியச் செய்யவே இந்த திருவிளையாடலை நடத்தியதாக மும்மூர்த்திகள் கூறினர். மேலும் மும்மூர்த்திகளும் கேட்கச் சொன்ன வரத்தின் பேரில் தம்பதிகள், தங்களுக்கு புத்திர செல்வம் அருளும்படி வேண்டினர். அதன்படி பிறந்த குழந்தைகள்தான் சோமன், துர்வாசர், தத்தாத்ரேயர் ஆகியோர்.

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வருபவர் சந்திரபகவான். மானுடப் பிறவியில் உடலில் எந்தவித ஊனமும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான தேகத்துடனும், தாயின் அன்பு மற்றும் ஆதரவுடனும் வாழ சந்திரனின் அனுக்கிரகம் முழுமையாக வேண்டும். சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிப்பவர்.

மனிதர்களின் உடல். மனம், புத்தி மற்றும் தாயார் போன்ற வாழ்க்கைக்கு முக்கியமான காரக கிரகமாக அமைந்துள்ளவர். சந்திரன் பூமியை ஒரு மாதத்தில் சுற்றி முடிக்கிறது. சந்திரன் உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும் ரத்தத்திற்கும் ஆதிபத்தியம் பெறுகிறார்.

சந்திரனின் செயல்கள் அனைத்தும் இனிமை கொண்டவை. இரவில் நடைபெறும் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர். கலைஞர்களின் கற்பனை வளர்ச்சிக்கு காரணமானவர்.