சாரதா பீடத்தின் சரஸ்வதி கோயில் எங்கே இருக்கு, எப்படி இருக்குன்னு தெரியுமா?

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் நீலம் மலைத்தொடர் பள்ளத்தாக்கில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்திருக்கிறது இந்த சாரதா பீடம்.


சக்தி பீடத்தில் ஒன்றான் சாரதா சக்தி பீடம் காஷ்யப முனிவரால் தேவபூமி என வர்ணிக்கப்பட்ட அந்தப் பகுதியில் ஷ்ரதா பீடத்தை உருவாக்கியவர் கார்கோடர் வம்ச மன்னன் லலித நித்யா என்பது பொதுவான நம்பிக்கை. சாரதா பீடத்தின் சரஸ்வதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. இங்கு சந்தன மரக்கிளை வடிவில் சுயம்புவாக தோன்றியவர் சாரதாதேவி.

சாரதா என்றால் சரஸ்வதி என்ற பொருள் உண்டு. சரஸ்வதியின் சிலை இருந்ததால் மட்டுமே அது சிறப்பு பெற்றுவிடவில்லை. அந்த இடமே வேத பல்கலைக் கழகம் போன்று செயல்பட்டிருக்கிறது. எண்ணற்ற அறிவாளிகள் அங்கே இருந்திருக்கிறார்கள். அரிய பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் அதுகுறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அது அறிவின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது.

முதலில் சிறிய வழிபாட்டுத் தலமாகவும் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரிய கோயிலாகவும் எழும்பியதாகச் சொல்லப்படும் சாரதா பீடத்தில் வேதங்களும் 64 கலைகளும் குடிகொண்டு இருந்திருக்கிறது.

வேதமும் சங்கீதமும் கல்வியும் கற்றுத் தரப்பட்ட இந்த மையத்தில் சமஸ்கிருத மற்றும் காஷ்மீர சரஸ்வத் பண்டிதர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சீன பௌத்த துறவியான யுவாங் சுவாங் இந்த வேத பாடசாலை பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.

நமது எல்லைப் பகுதியில் இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் அன்னியர் படையெடுப்பின் போது இந்த ஸ்தலம் பாதிக்கப்பட்டது. முதலில் 14ஆம் நூற்றாண்டில் அந்நிய அரசர்களால் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.

சுமார் 450 வருடங்களுக்கு பின் இந்த பகுதியின் முதல் இந்து மன்னரான டோக்ரா வம்சத்து குலாப் சிங் இந்தக் கோயிலின் பல பகுதிகளை சீர்செய்தார். ஷ்ரதா தேவியை முதன்மை தெய்வமாக வழிபடும் சரஸ்வத் பண்டிதர்களைக் கொண்டு வழிபாடுகள் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது போரில் மீண்டும் இந்த கோயில் சிதைக்கப்பட்டது. பின்னர் 1948இல் போர் முடிவுக்கு வந்த பின் ஸ்தலம் இருந்தப் பகுதியானது ஆப்கன் பழங்குடியினரான பாஷ்யன்களிடம் சென்றது. அதன்பின் ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு போய்விட்டது. 2005 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் மிச்சமிருந்த இந்த கோயிலின் பெரும்பகுதியும் சேதமடைந்து விட்டது