உயிருக்கு போராடிய 4 வயது சிறுவன்! அள்ளிக் கொடுத்த மக்கள்! ஒரே நாளில் நிகழ்ந்த அதிசயம்!

இதயத்தை தொட்ட சம்பவம் - மும்பையில் கல்லீரல் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு ஒரே நாள் இரவில் வசூலான ரூ. 16.5 லட்சம்


4 வயதுச் சிறுவனான மயங்க் பட்டீலுக்கு கல்லீரல் பாதிப்பால் தானேயில் உள்ள ஜுபிடர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மாற்றுக் கல்லீரல் பெறவும், சிறுவனுக்கு இருந்த சிக்கலான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு மருத்துவமனை தங்கும் செலவுகள் உட்பட மருத்துவர்கள் சொன்ன செலவுத்தொகை பெற்றோரான ஹரீஷ் பட்டீல் ஜோதி தம்பதியினரின் தலையைச் சுற்றச் செய்தது. 

மருத்துவர்கள் சொன்ன தொகை 35 லட்சத்துக்கு மேல் இருந்தது. ஏழைப் பெற்றோரான அந்தத் தம்பதி இந்தத் தொகையை எப்படி திரட்டி எவ்வாறு தங்கள் மகனின் சிகிச்சையை மேற்கொள்ளப் போகிறோம் என விழி பிதுங்கி நின்ற நிலையில் அவர்களுக்கு இணைய தள செய்தி நிறுவனமான மிட் டே கை கொடுத்தது. 

அந்த இணையதளத்தில் மயங்க்கின் பாதிப்பும், அவனது பெற்றோரின் பரிதாப நிலையும் உருக்கத்துடன் வெளியிடப்பட்டன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அந்த இணைய தளத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் மயங்க்கின் தந்தை ஹரீஷ் பட்டீலை தொடர்பு கொண்டு க்ரவுட் ஃபண்டிங் இணையதளமான மிலாப்பை அணுக யோசனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த இணையதளத்தில் மயங்க்குக்காக நிதி சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல நல்ல இதயங்களுக்கு சொந்தக்காரர்கள் நிதியைக் குவிக்கத் தொடங்கினர். ஒரே நாள் இரவில் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. 

மேலும் மருத்துவமனையும் உதவ முன்வந்தது. ஜுபிடர் மருத்துவமனை நிர்வாகம் மயங்க் சிகிச்சைக்கான கட்டணத்தை பாதியாகக் குறைத்துக்கொண்ட நிலையில் மருத்துவமனைக்கு 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது இந்நிலையில் தொண்டு நிறுவனங்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறப்பட்ட நிலையில் முதலமைச்சர் நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதனைக் கொண்டு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுவன் மயங்க் தற்போது நலம் பெற்று வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உதவும் கரங்களால் சிறுவனுக்கு வாழ்க்கை கிடைத்தது நெகிழச் செய்கிறது.