தலைமையில் இருந்து அழைப்பு என்றதும் சென்னைக்கு ஓடோடி வந்த கொங்கு நிர்வாகியின் ஒரு நாள் அனுபவத்தைக் கேளுங்கள்... கமல் கமலேதான் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.
கமல் கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு நாள்..! மண்டை குழம்பி மயங்கி விழுந்த நிர்வாகி!

சினிமாவில் கமல்ஹாசன் என்றாலே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதுதான் ஞாபகம் வரும். அதேபோல், அரசியலில் கமல்ஹாசன் என்றால், புரியாமல் பேசுவதுதான் நினைவுக்கு வரும். ஆனால் எனக்கு மட்டும் கட்டிப்பிடி வைத்தியம் மட்டும்தான் ஞாபகத்திற்கு வருகிறது என்கிறார் கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர். சமீபத்தில் சென்னைக்கு வந்து திரும்பிய அவரது அனுபவங்களைக் கேளுங்கள்.
‘‘நான் கமல்ஹாசனின் வெறிபிடித்த ரசிகன். சொந்தமாக தொழில் நடத்தி வருகிறேன். அவரது தீவிர ரசிகர் என்பதால் கட்சியில் சேர்ந்து கொங்கு பகுதியில் முக்கியப் பொறுப்பு வாங்கினேன். அடுத்து கமல்ஹாசன் எங்கள் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு சென்னையில் மய்யம் அலுவலகத்திற்குப் போனேன். நல்ல மரியாதை கொடுத்து அமர வைத்தார்கள்.
நான் பொதுச்செயலாளர் அருணாசலத்திடம் அனுமதி வாங்கித்தான் வந்திருந்தேன். காலை 10 மணிக்கு வந்துவிடுங்கள் என்று அவர் சொல்லி இருந்தார், அதனால் 9:30 மணிக்கே அலுவலகத்தில் ஆஜர் ஆகிவிட்டேன்.
பொதுச் செயலாளர் எப்போது வருவார் என்று அங்கே பணியாற்றிய ஒருவரிடம் கேட்டேன். அவருக்கு எதுவும் புரியவில்லை. அருணாச்சலம் என்றதும், ‘வருவார்’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அவருடைய வேலையைப் பார்த்தார். பெரிய மனிதர் என்பதால் நிறைய வேலைகள் இருக்கும் என்று காத்திருந்தேன்.
யார், யாரோ வந்தார்கள்... போனார்கள். ஒவ்வொரு நபர் உள்ளே வரும்போதும் அருணாசலம் என்று நினைத்து எழுந்து அமர்ந்தேன். அப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போய்விட்டது. திடீரென அலுவலகம் பரபரப்பானது. தலைவர் வருகிறார் என்று சொன்னார்கள். ஓ.. கமல்ஹாசன் வருகிறார் என்று நினைத்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஏற்கெனவே எங்கள் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது பேசியிருக்கிறேன் என்பதால், என்னை அடையாளம் கண்டுகொள்வார் என்று நம்பினேன்.
அங்கிருந்த ஒருவரிடம், ‘தலைவர் எப்போது வருகிறார்?’ என்று கேட்டேன். அத்தனை பரபரப்புக்கு இடையிலும் என் கேள்வியை ஒரு பொருட்டாக மதித்து, ‘வருவார்‘ என்று பொறுப்பாக பதில் சொல்லிவிட்டுப் போனார். அப்படியே மேலும் ஒரு மணி நேரம் போய்விட்டது.
நான் மதியம் சொந்த வேலைகள் கொஞ்சம் பார்த்துவிட்டு, இரவு டிரெயினில் ஊருக்குப் போவதாகப் பிளான். அதனால் அருணாசலம் வருகிறாரா இல்லையா என்று கேட்பதற்கு போன் செய்தேன். அது ஸ்விட்ச் ஆஃப்.
உடனே அந்தப் பக்கம் போன ஒரு நபரிடம், ‘‘அருணாசலம் எப்போது வருவார், அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது’’ என்று சொன்னேன். அவர் நான் சொன்னதை முழுமையாக கேட்டுவிட்டு கொஞ்சம் யோசித்து, ‘வருவார்’ என்றபடி நகர்ந்தார்.
ஆனால், அவர் இந்த உலகத்திலேயே நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வெளியே சென்றவர் திரும்பிவந்து, ‘‘காலையில் இருந்து இங்குதானே இருக்கிறீர்கள்... வாருங்கள் சாப்பிடலாம்’’ என்று சொன்னார். கமல் அலுவலகத்தில் விருந்தோம்பல் நன்றாக இருக்கிறதே என்ற எண்ணத்தில் அவருடன் சாப்பிடக் கிளம்பினேன். அலுவலகத்திலேயே சாப்பாடு போட்டார்கள். ருசி குறைவுதான் என்றாலும், கொடுக்கப்பட்டதே என்ற சந்தோஷத்தில் சாப்பிட்டு முடித்தேன். மீண்டும் காத்திருக்கத் தொடங்கினேன். அப்படியிப்படி என்று மாலை 4 மணி ஆனது.
இனிமேல் கிளம்பவேண்டியதுதான் என்று நினைத்தபோது, கவிஞர் சினேகன், சுஹா போன்றவர்கள் உள்ளே வந்தனர். உடனே அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே என் உள்ளம் குளிரும் வகையில் சினேகன் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினார்.
‘‘அருணாசலம் வரச்சொன்னார்’’ என்றேன்.
அவரும், ‘வருவார்’ என்றபடி அறைக்குள் சென்றார். மேலும் சில நிர்வாகிகள் வந்துகொண்டே இருந்தனர். அனைவரும் அறைக்குள் சென்று சங்கமித்தனர். நாலைந்து பெண்களும் அறைக்குள் போனார்கள். எந்த நேரத்திலும் கமல் வந்துவிடுவார் என்று நான் மட்டும் பதட்டமாகவே வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மதியம் என்னை சாப்பாட்டுக்கு அழைத்துச்சென்ற மனிதர் இப்போது கையில் பேக்குடன் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்து நட்புடன் சிரித்து கை காட்டிவிட்டு போயே விட்டார். மணியைப் பார்த்தேன். மாலை 6. இனிமேல் இங்கு இருந்தால் டிரெயின் பிடிக்க முடியாது என்பதால், உடனே வெளியே வந்து ஆட்டோ பிடித்து சென்ட்ரலுக்கு வந்து ரயிலில் ஏறி அமர்ந்தேன். ரயில் வேகம் எடுக்கத் தொடங்கியது.
அடுத்த நாள் காலை செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். அருணாசலம் பேசினார்.
‘‘ஹலோ சார், நேற்று காலையில இருந்து உங்களுக்காக சென்னையில் காத்திருந்தேன்’’ என்று சொன்னேன்.
‘‘அப்படியா... நானும் உங்களுக்குத்தான் காத்திருந்தேன்’’ என்று அமைதியாகச் சொன்னார். அதற்கு மேல் அவருடன் என்ன பேசுவது என்று தெரியாமல் தொடர்பைத் துண்டித்தேன். ஆமா, நான் இதுவரைக்கும் நான் சரியாத்தான் பேசியிருக்கேனா..? என்று கூறியபடி மயங்கி விழுந்துள்ளார்.