டிசம்பரில் ஆறு கிரகச்சேர்க்கை. 12 ராசிக்காரர்களுக்கும் பலன் இதுதான்!

கிரகச்சேர்க்கை என்பது ஒரு ராசி கட்டத்தில் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக கூட்டணி வைத்து செயல்படுவதாகும். இதனால் பாதிப்பு என்பது அவரவர் ஜாதகங்களை பொறுத்து இருக்கும்.


டிசம்பர் மாத இறுதியில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் ஆகிய ஆறு கிரகங்களின் சேர்க்கை நடைபெறுகிறது. நவகிரகங்கள் 12 ராசியில் ஏதாவது ஒரு மாதத்தில் சஞ்சரிக்கின்றன. சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 2 1ஃ4 நாட்களுக்கு ஒருமுறையும், சூரியன் மாதம் ஒருமுறையும் நகர்கின்றன.

குரு ஆண்டிற்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு, கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. ஆறு கிரகங்களின் கூட்டணி ஒரு ராசியில் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். அந்த வகையில் 6 கிரகங்கள் கூட்டணி 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகிறது?... என்பதைப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேர்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. துன்பங்கள் விலகி நல்லதே நடக்கும் என்பதால் மேஷ ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். ரிஷப ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் மறைகின்றன. சந்திராஷ்டம நாள் என்பதால் அமைதியாக இருக்கவும். ஆயுள் ஸ்தானத்தில் கிரகங்கள் இணைவதால், கெடுதல் ஏற்படாது என்றாலும் மருத்துவ செலவு ஏற்படும். பயணங்களை தவிர்க்கவும்.

மிதுன ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும் நண்பர்களிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கடக ராசிக்கு ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நோய்கள், துன்பங்கள் விலகும்.

சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், கர்ப்பிணி பெண்களுக்கு கவனம் தேவை. விரய செலவுகள் ஏற்படும். கன்னி ராசிக்கு ஆறு கிரகங்கள் நான்காம் வீட்டில் இணைவதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை வேண்டும். வாகனங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். எதையும் சிந்தித்து முடிவு எடுக்கவும்.

துலாம் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், எதையும் துணிந்து செய்யலாம். விருச்சிக ராசிக்கு இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால், பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தனுசு ராசிக்கு ஜென்ம ராசியில் ஆறு கிரகங்கள் இணைவதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகர ராசிக்கு 12ம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  கும்ப ராசிக்கு 11ம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், சிறப்பான நாள். இயற்கையே வசப்படும் யோகம் உண்டாகும். லாபம் ஏற்படும் என்பதால் கவலைப்படாமல் இருக்கலாம்.

மீன ராசிக்கு பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால், வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்படும். குழப்பமான சூழல் அமையும். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.