ரூ.200 கோடி வேண்டாம்..! ரூ.50 கோடி கொடுங்கள்..! ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் மகன் கொடுத்த செம ஆஃபர்!

திருப்பூரில் ரூ.200 கோடி மதிப்புடைய இடத்தில் ரோபாக்களை வைத்து கட்டுமானப்பணிகளில் ஓபிஎஸ் மகன் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளியான செய்திக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அதிரடி பதில் அளித்துள்ளார்.


ஓபிஎஸ் மகன்கள் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் கிடைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உரிய சட்ட திட்டங்களை பின்பற்றியே தங்கள் நிறுவனம் செயல்படுவதாக பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், ஓபிஎஸ் மகன்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறி செய்திகள் வெளியாகின. அதற்கு ஓபிஎஸ் மகன் விஜயபிரதீப் வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ``தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில், ஒரு செய்தி வெளியானது. நான் திருப்பூரில் தொழில் செய்யும் இடம், 200 கோடி ரூபாய் மதிப்பு என்றும், அதில் நான் வீடு கட்டி வேலைக்கு ரோபோக்களை வைத்துள்ளேன் என்றும் பொய்களைக் கூறியுள்ளார்கள். இதற்கு விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன். இதுநாள் வரை, நான் வீடு கட்டும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டதில்லை. எந்த வீடுகளையும் விற்பனை செய்ததில்லை.

அப்படி இருக்கையில், நான் வீடு கட்டி, அதில் ரோபோக்களை வேலைக்கு வைத்திருப்பதற்கு ஒரேநாளில் வீட்டுவசதித் துறையிடம் அனுமதி வாங்கியுள்ளேன் என்று மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளீர்கள். நான் வீட்டுமனைகளைப் பிரித்து இடங்களாக மட்டுமே விற்பனை செய்துவருகிறேன். நான், திருப்பூரில் உள்ள எனது இடத்தில் மூலப்பத்திரம் மற்றும் அரசிடம் வாங்கிய சான்றிதழைக் கொண்டு வருகிறேன். முரசொலி பத்திரிகையான நீங்களும், அந்தக் கட்டடத்துக்கு எப்படி ஒப்புதல் வாங்கப்பட்டது என்ற விவரத்தையும் எடுத்துக்கொண்டு வாருங்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் செய்யவும், பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் வங்கித்தவணை கட்டவும் பாரமாக உள்ளது. நீங்கள் எனது இடத்தை 200 கோடி என்று நல்ல விலைக்கு நிர்ணயம் செய்ததால், அந்த இடத்தை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். கிரையம் செய்து கொடுக்கிறேன். எனக்கு, நீங்கள் நிர்ணயித்த 200 கோடி ரூபாய் வேண்டாம். 50 கோடி கொடுங்கள். அந்த திருப்பூர் இடத்தை மட்டுமல்ல, என் சொத்து முழுவதையும் கொடுத்துவிடுகிறேன்.

அதில், என் தொழில் முன்னேற்றத்துக்காக நான் வாங்கிய கடன் போக, மீதித் தொகையை, கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். தமிழக மக்களாகப் பார்த்து, எனது வாழ்வாதாரத்துக்கு உதவிகள் செய்தால் போதும். அரசியலுக்காக இதைக் கூறவில்லை. நாளைய தினமே கிரையம் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என வீடியோவில் கூறியுள்ளார்.