முதல் வரிசையில் ஓபிஎஸ் மகன்! சீனியர்களுக்கு பின்வரிசை! அதிமுக விழாவில் சலசலப்பு!

சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் இஃபதார் விழாவில் ஓபிஎஸ் மகனுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.


சென்னையில் அதிமுக சார்பில் நந்தம்பாக்கத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் இந்த விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென இஃப்தார் விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டார். இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் விழா நடைபெற்றது.

பாமக ராமதாஸ், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், சரத்குமார், புதியதமிழகம் கிருஷ்ணசாமி, தனியரசு, உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஓபிஎஸ், நல்லவர்களை இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு இறைவன் நிறைய கொடுப்பான். ஆனால் கைவிட்டுவிடுவான் என்று தெரிவித்தார்.

அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக இடைத்தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதற்கு சான்று 9 சட்டமன்ற இடைத் தேர்தலில் அடைந்த வெற்றியே, அதன் அடிப்படியிலே தேர்தல் முடிவுகளும் அமைந்தது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டார்.

ரவீந்திரநாத்துக்கு விழாவில் முதல் வரிசையில் அமர இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் சீனியர்கள் பலருக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எப்படி ரவீந்திரநாத்துக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு எம்பி என்கிற அடிப்படையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.