தினகரனிடம் தஞ்சம் அடைந்தாரா ஓ.பி.எஸ்.ராஜா..?

தன்னை கட்சியில் இருந்து விரட்டிய ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான கோபத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்.ராஜா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பெரிய சஸ்பென்ஸ்.


தான், தன்னுடைய குடும்பம் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற பெரிய மனம் படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால்தான் தன்னுடைய அரசியல் வாரிசாக மூத்தமகன், இளையமகன் இரண்டு பேரையும் களத்தில் இறக்கிவருகிறார். இவர்களுக்கு எந்த வகையிலும் யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். அதனாலே தன்னுடைய தம்பியை கட்சியில் இருந்து ஓரங்கட்டினார் என்பதுதான் அ.தி.மு.க.வினர் சொல்லும் கருத்து.

தன்னுடைய நண்பன் செல்லமுத்துதான் ஆவின் தலைவராக வரவேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தார் ஓ.பி.எஸ். அதாவது எந்தக் காரணம் கொண்டும் தம்பி பதவிக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்தார். அவருக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால், தன்னை மீறி வளர்ந்துவிடுவார், தன்னிடம் நிற்க வேண்டிய அவசியம் வராமல் போய்விடும் என்றுதான், தலைவர் பதவிக்கு நிற்கவேண்டாம் என்று சொல்லிவந்தார்.

ஆனால், அண்ணன் சொல்வதைக் கேட்காமல் தானே களத்தில் குதித்து ஆவின் தலைவராக வெற்றியும் பறித்துவிட்டார். இதனை பன்னீர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்து தன்னுடைய ஆதரவாளர்களையும் வளைத்துவிடுவார், தன்னை மீறி வளர்ந்துவிடுவார் என்று கோபப்பட்டுத்தான் உடனே எடப்பாடியுடன் கலந்துபேசி கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். பன்னீரின் வேண்டுகோளைக் கேட்டு எடப்பாடியே அதிர்ச்சி அடைந்தாராம்.

தன்னை கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட செய்தி கேட்டு ராஜா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே வேண்டப்பட்ட அமைச்சர் மூலமாக எடப்பாடியை தொடர்புகொண்டாராம். என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் விசுவாசியாக இருக்கிறேன் என்று வேண்டுகோள் வைத்தாராம். இருக்கும் பஞ்சாயத்தே போதும், இதுவேண்டவே வேண்டாம் என்று கட் செய்தாராம் உடனே விஷயத்தை பன்னீருக்கும் பாஸ் செய்து விட்டாராம்.

பன்னீருக்கு எப்படியாவது செக் வைக்கவேண்டும் என்ற கோபத்தில் டி.டி.வி. தினகரனுக்கு போன் போட்டுள்ளார். நான் நாளையே உங்கள் கட்சியில் இணைந்து உங்கள் காலில் விழுகிறேன். பன்னீர் மீது நீங்கள் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும், அதை நான் வழிமொழிகிறேன் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு தினகரன், நான் வேண்டுமானால் உங்கள் காலில் விழுகிறேன். என் கட்சிக்கு நீங்கள் வரவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். நல்லா இருந்த கட்சியை உடைச்சி, சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்புனதே உங்க குடும்பம்தான். அதனாலே பகக்த்திலேயே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

ஏதேனும் வகையில் அங்கீகாரம் பெற்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது தி.மு.க.வுக்கு தூது அனுப்பியிருக்கிறாராம் ராஜா. வந்தாரை எல்லாம் வாழவைக்கும் தி.மு.க. உடனடியாக மறுப்பும் சொல்லாமல், ஏற்கவும் செய்யாமல் ராஜாவின் கோரிக்கையை பெண்டிங் வைத்திருக்கிறதாம். பன்னீருக்கு எதிராக அவரது தம்பியை வைத்தே அரசியல் செய்தால் சூடாக இருக்கும் என்பதாலே, அவரது கோரிக்கையை இன்னமும் நிராகரிக்க வில்லையாம்.

அதனால் ஏதேனும் சுபமுகூர்த்த சுபநாளில் தி.முக.வுடன் ராஜா சேர்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இப்போது எந்தக் கட்சியில் இல்லை என்றாலும் ஆவின் தலைவர் பதவியிலேயே வெயிட்டாக சம்பாதிக்க முடியும். அதனால் இன்னும் கொஞ்சநாட்கள் அமைதியாக இருந்து, மீண்டும் அதிமுகவிலேயே ஐக்கியமாகிவிடலாம். அண்ணனை எதிர்த்து பிரச்னை செய்யவேண்டாம் என்று குடும்பத்தினர் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.

ஆனால், என்னை அசிங்கப்படுத்துன பன்னீரை சும்மா விடமாட்டேன் என்று வீராப்பு காட்டுகிறாராம் ராஜா. பார்க்கலாம்.. பார்க்கலாம்.