மருத்துவப்படிப்புகளில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு இந்த ஆண்டு 50% இட ஒதுக்கீடு கிடையாதாம்… உச்சநீதிமன்றம் அதிரடி

மருத்துவப்படிப்புகளில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக கட்சிகள் அனைத்தும் வழக்கை தொடர்ந்திருந்தன. இந்த. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ’ மருத்துவப்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையில்லை’ என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து, மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, நடப்பாண்டிலே வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த மத்திய அரசும், “நடப்பாண்டில் இடஒதுக்கீட்டை வழங்க முடியாது. இந்த ஒதுக்கீட்டை வழங்கும் விவகாரத்தில் இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்,” என மத்திய அரசு கூறியிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் 26ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்தது.

அதன்படி, இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதில், மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று பரபரப்பு தீர்ப்பை அளித்திருக்கிறது.