இவர்கள் வெறும் செவிலியர்கள் இல்லை! கடவுளர்! மதுரையை கலங்க வைத்த அமுதா! முத்துமீனா! தவமணி!

கொரோனா காலத்தில் மதுரையில் செவிலியராக பணிபுரிந்து மக்களுக்கு சேவையாற்றிய சகோதரிகள் 3 பேருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கடந்த 3 மாதத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் அதன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. கொரோனா தொற்று வந்துவிட்டது என்ற சந்தேகம் அடைந்தால் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் தள்ளிப் போகும் இந்த காலத்தில் மதுரையை சேர்ந்த மூன்று சகோதரிகள் கொரோனா வார்டில் செவிலியராக பணிபுரிந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரையை சேர்ந்த அமுதா, தவமணி, முத்து மீனா ஆகிய 3 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்தவுடன் மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இவர்கள் 3 பேரும் செவிலியராக பணியமர்த்தப்பட்டார்கள். இக்கட்டான காலகட்டத்தில் சகோதரிகள் 3 பேரும் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி மக்களுக்கு சேவை செய்துள்ளனர். இதுபற்றி மூத்த சகோதரி அமுதா அவர்கள் கூறியதாவது: முதலில் எங்களை கொரோனா வார்டில் பணியமர்த்திய போது மற்றவர்களைப் போல எங்களுக்கும் அச்சமாகவே இருந்தது. மருத்துவர்கள் மற்ற ஊழியர்களை பார்த்தவுடன் இதுவும் வழக்கமான பணி போலதான் என்று எண்ணி நாங்கள் பணியாற்ற ஆரம்பித்தோம்.

மருத்துவமனைகளில் எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்தார்கள். மக்களுக்கு சேவையாற்ற தான் இந்த பணிக்கு வந்தோம். ஆகையால் சாதாரண காலம் கொரோனா காலம் என்று பிரித்து பார்க்காமல் மக்களுக்கு நாங்கள் செயலாற்றி வருகிறோம். நாங்கள் மூவரும் செவிலியர் ஆவதற்கு காரணம் எங்கள் அம்மா தான். எங்களுடைய அம்மா இதே மருத்துவமனையில் மூத்த செவிலியராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றி வரும் போது செவிலியர் பணியைப் பற்றி உயர்வாக எங்களிடம் சொல்லி வருவார். இதனால் செவிலியர் பணி மீது எங்களுக்கு ஈர்ப்பு அதிகம் ஆகியது. முதலில் நான் படித்து முடித்து செவிலியர் பணியில் சேர்ந்தேன். பின்னர் எனது இரண்டு தங்கைகளும் செவிலியர் பணியையே தேர்வு செய்தார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சகோதரிகளுடன் நாங்கள் மூன்று பேரும் கொரோனா வார்டில் ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறினார். தற்போது இவர்கள் மூவரின் பணி நாட்கள் முடிவடைந்து தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஓய்வுக்காக தங்களுடைய வீட்டிற்கு வந்துள்ளனர்.

கொரோனா பணியில் மக்கள் சேவைக்காக ஈடுபட்ட மூன்று சகோதரிகளையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.