ஸ்டாலின் பொய்களை அம்பலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி... மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் அ.தி.மு.க. பக்கம் வந்தாச்சு.

ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பொய் மேல் பொய்யாக வாக்குறுதி தருவதுதான் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பழக்கமாக இருந்துவருகிறது. அப்படி போலியான வாக்குறுதிகளைக் கொடுத்துத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்றது.


வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்படி ஆகிவிடக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் உஷார் நடவடிக்கைகளால் திமுக வட்டாரம் ஆடிப்போய் உள்ளது. அவ்வப்போது தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துப் பேசும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ,’’ஸ்டாலின் கனவுலகில் சஞ்சரிப்பதை இன்னும் நிறுத்தியபாடில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அதே உத்தியைப் பின்பற்றி வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார். இதன் காரணமாகத்தான் தனது தேர்தல் பிரசார கூட்டங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால், தமிழக மக்கள் இந்த முறை ஏமாறத் தயாராக இல்லை. அவருக்கு கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாராவது உண்மை நிலவரத்தை விளக்குவது நல்லது என சொல்கிறார்கள் இவர்கள்.

இதனிடையே,இந்த முறை ஸ்டாலினின் போலி வாக்குறுதி உத்தியை தேர்தலுக்கு முன்னதாகவே அடித்து நொறுக்கி விட வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என உற்சாகம் மேலிட பேசுகிறார்கள் அதிமுகவினர்.

‘’நீட் தேர்வை முன் வைத்து மாணவ சமுதாயத்தின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று திட்டம் தீட்டியிருந்தார் ஸ்டாலின். ஆனால், நீட் தேர்வுக்கு யார் காரணம் என்ற உண்மையை நாங்கள் அம்பலப்படுத்தி விட்டோம். கூடவே கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், ஆல் பாஸ் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை திக்குமுக்காட செய்தார்.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வசதியாக தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க உத்தரவிட்டார். அதே போன்று புயல், மழையால் பாதிக்கப்பட்ட 11 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 1,117 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் குறித்த முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு ஊழியர்களை தங்கள் பக்கம் வளைத்து விடலாம் என்ற திமுக திட்டத்திலும் மண் விழுந்து விட்டது. கொரோனா காலத்திலும் அவர்களுக்கான சம்பளத்தைக் குறைக்காதது, தீபாவளி, பொங்கலுக்கு போனஸ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து போன்றவை தேர்தலுக்கு முன்னதாகவே அவர்களை அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றி விட்டன. 

எடப்பாடியின் இத்தகைய அதிரடிகளை எதிர் பார்க்காத திமுக மேலிடம், அடுத்து எதை அள்ளிவிடுவது என்கிற கவலையில் ஆழ்ந்து விட்டனர். ஸ்டாலின் நிலவரமும் கலவரமாக இருப்பதாகத் தகவல்.