அவளை யாராவது அப்படி நினைத்து விட்டால்! மனைவிக்காக மனம் திருந்திய திருட்டு கணவன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!

நான் செய்த தவறுகளுக்காக என் மனைவியை யாரேனும் கேள்வி கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் திருந்தி வாழ்வதாக ஆண் ஒருவர் கூறியிருப்பது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பூர்வீகமாக கொண்டவர் கமலக்கண்ணன். இவர் சென்னையிலுள்ள பட்டினப்பாக்கம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் மீது 40 கொள்ளை வழக்குகளும், 5 குண்டர் சட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

6 மாதங்களுக்கு முன்னால் இவருக்கு கலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அடிக்கடி கமலக்கண்ணன் நீதிமன்றத்திற்கு சென்று வருவதை கண்காணித்த கலா, அதுபற்றி அவரிடம் வினவியுள்ளார்.

உண்மையை மறைக்காமல் கமலக்கண்ணன் தான் ஒரு திருடன் என்று ஒப்பு கொண்டுள்ளார். பிற பெண்களை போன்று திருடனை திருமணம் செய்து கொண்டோம் என்று மனம் வருத்தப்படாத கலா, தன் கணவனை திருந்தி வாழ வைக்க முயற்சித்தார்.

அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். தற்போது எங்கெல்லாம் கணவர் மீது வழக்குள்ளதோ, அங்கெல்லாம் இருவரும் ஜோடியாக சென்று இனி எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதி அளித்து வருகிறார்.

இந்த திடீர் மனமாற்றம் குறித்த ஊடகம் ஒன்று அவரிடம் விசாரித்த போது, "என் பெயர் கமலக்கண்ணன். நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன். நான் சிறு வயதில் என்னுடைய சித்தியின் கொடுமைகளை அனுபவித்தேன். அதன் பின்னர் சென்னை கொருக்குப்பேட்டையில் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்து வந்தேன். முதன் முதலாக கட்டிட வேலைக்கு சென்ற போது கொத்தனாரை அடித்ததற்காக காவல்துறையினர் என்னை அழைத்து சென்றனர். 

அப்போது என் அக்கா என்னை ஜாமீனில் எடுத்தார். சிறையில் இருந்தபோது ஒரு நபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் செய்த குற்றத்திற்காக மீண்டும் ஒருமுறை காவல்துறையினர் என்னை கைது செய்தனர். ஆனால் இந்த முறை என் அக்கா என்னை ஜாமீனில் எடுக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்னுடைய வாழ்க்கை திசை மாறியது. தொடர்ந்து திருட தொடங்கினேன். திருமணம் செய்து வைத்தால் நான் மாறி விடுவேன் என்பதற்காக கலா என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் என் வாழ்க்கை தடம் மாறியது என்பதை உணர்ந்த கலா என்னை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையின் மீது எனக்கு பயம் வந்துவிட்டது. நான் செய்த தவறுகளுக்காக யாரேனும் கலாவிடம் அவமரியாதையாக பேசி விடுவார்களோ என்ற அச்சம் நெடுநாளாக நிலவி வந்தது. போக்குவதற்காகவே நான் திருந்தி வாழ முடிவெடுத்தேன்" என்று கூறினார்.

இந்த பேட்டியானது பலருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.