கல்விக் கொள்கையே வேண்டாம்… இதை ஆராய ஒரு குழு எதற்கு..? டென்ஷன் ஆகும் மருத்துவர்கள்.

மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ள ,மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இக் கொள்கை தொடர்பாக ஆராய குழு அமைத்திருப்பது அவசியமற்றது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 யை சென்ற ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது.அதற்கு நாடு முழுவதும் கடும் எதிரப்பு எழுந்தது.கல்வியாளர்கள் அந்த வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் அந்த வரைவு கொள்கையின் சாரம் மாறாமல், அப்படியே அது `தேசியக் கல்விக் கொள்கை 2020’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு உலக வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது. அதன் பிறகு, அக்கொள்கையை நடைமுறைப்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் இக்கல்விக் கொள்கை,நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. மும்மொழி திட்டத்தை கட்டாயப் படுத்துகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழி வகுக்கிறது. கல்வியை கார்ப்பரேட் மயமாக்குகிறது.குலக் கல்வி முறையையும்,சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலையும் மறைமுகமாக திணிப்பதாக உள்ளது.இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான நோக்கத்துடன் இக்கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது.

 மத்திய அரசின் இந்த தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில் ,போலி மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவ முறைகளையும் திணிப்பதற்கு முயல்கிறது. இந்தக் கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியை மேலும் தனியார் மயமாக்குகிறது. கார்ப்பரேட் மயமாக்குகிறது. சமூக நீதிக்கு எதிராக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது. எனவே, இந்த தேசிய கல்விக் கொள்கை 2020 யை , உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இக் கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்திருப்பது அவசியமற்றது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் போல் உள்ளது. தமிழக அரசு இக்கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.